தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS-Sample Registration Survey 2021 தரவுகளின் படி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும்.
தென் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கு குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 1.4 ஆக குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது.
இந்த நிலை புதிது இல்லை என்றாலும், கடந்த கால தரவுகளுடன் ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்திருக்கிறது.
1950 ஆம் ஆண்டு 5.7 ஆக இருந்த குழந்தைப் பிறப்பு விகிதம், தற்போது SRS 2021 தரவுகள் படி 2.0 ஆக குறைந்துள்ளது. ஒரு நாட்டில், நிலையான மக்கள் தொகையை பராமரிக்க இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். கேரள மாநிலம் இந்த நிலையை 1988 ஆம் ஆண்டில் எட்டியது.
அதையே தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000 ஆம் ஆண்டுகளிலும் எட்டின.
குழந்தைப் பிறப்பு விகிதம் சரியும் போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும். அதே சமயம், அது நாட்டுமக்களின் சராசரி ஆயுளை அதிகரிக்கும்.
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம், 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பார்கள் என்றும், 2046-ம் ஆண்டுக்குள் முதியவர்கள் 0-15 வயது பிரிவினரை விட அதிகமாக இருப்பார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது.
நாட்டில் அதிக முதியவர்கள் கொண்ட மாநிலம் கேரளா. அதையடுத்து தமிழ்நாடு. கேரள மக்கள் தொகையில் 14.4% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள். தமிழ்நாட்டில் இது 12.9% ஆக உள்ளது என்று SRS 2021 தரவுகள் கூறுகின்றன.
இது தொடர்பாக பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம், "முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றத்தின் போக்கில் ஏற்படும் இயல்பான வேறுபாடுதான். அவர்களுக்குத் தேவையான உடல்நலம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், காப்பகம் போன்ற வற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டி யிருக்கும். இது தமிழ்நாட்டை பாதிக்காது என்று கருதுகிறேன்," என்று கூறினார்.
மேலும் அவர்,”1990களில் வளரும் நிலையிலிருந்த தமிழ்நாட்டில் பணி யாற்றும் வயதிலான மக்கள் தொகை அதிகரித்தது. இப்போது நாம் அந்தக் கட்டத்தை தாண்டி விட்டோம். வளர்ந்த நாடுகளை போல முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது" என்றார் அவர்.
தமிழ்நாட்டில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம்: விளைவுகள் என்ன?
schedulePublished May 13th 25