அமெரிக்காவின் கெண்டகியில் வீட்டுக் கதவைத் திறந்த பெண்மணிக்கு வாசலில் காத்திருந்தது அதிர்ச்சி! வாசலில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்திருந்த லாலிபாப்புக்கு மூன்று லட்சம் பில் வந்திருந்தது. அம்மாவின் ஃபோனை எடுத்து விளையாட்டாக லாலிபாப் ஆர்டர் பண்ணியிருக்கிறான் மகன். விளையாட்டு வினையாகி விட்டது. 70 ஆயிரம் லாலிபாப்புகளை கொண்டு இறக்கி விட்டது அமேஸான்.
கெண்டகியிலுள்ள லெக்ஸிங்டனில் ஹாலி லஃபெவர்ஸ் என்பவரது வீட்டில் 30 பெட்டிகள் நிறைய வந்திறங்கிய டம்டம் லாலிபாப்புகளை அவரது மகன், எட்டு வயது லயாம் தனது நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக ஆர்டர் செய்ததாக தெரிய வந்தது.
பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், அமேஸானின் விற்பனை விதிகள் தடுக்க, அவர் முகநூலின் உதவியைத் தேடினார். முகநூல் வழியாக செய்தி பரவ, அது செய்தி சேனல்களுக்கும் வேகமாக பரவ, நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வந்தனர். அமேஸானையும் செய்தி எட்டிய போது, அமேஸான் பணத்தை ரீஃபண்ட் செய்ய முன்வந்தது. இதற்கிடையில் தாயும், மகனும், ஒரு பள்ளி, தேவாலயம் என்று சில இடங்களில் லாலிபாப்புகளை இனாமாக கொடுத்திருக்கின்றனர்.
அமேஸானும், நிலைமையை எந்த பிரச்சினையுமின்றி அருமையாக கையாண்டதற்காக மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தது.
“நான் நடந்ததை புரிந்து கொண்ட போது உடனடியாக அமேஸானை தொடர்பு கொண்டேன். அவர்களும் உடனடியாக அதை நிராகரிக்கச் சொன்னார்கள். ஆனால், வாகனஓட்டி கதவையும் தட்டாமல், என்னிடமும் சொல்லாமல் வீட்டுவாசலில் இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார். டெலிவரி ஆகிவிட்டால் அதை திரும்ப எடுக்க மாட்டோம் என்றார்கள். என்றாலும் எல்லாம் நன்மையாக முடிந்தது என்றார்.
தான் விரும்பிய படி, லாலிபாப் ஆர்டர் செய்த சிறுவன் லயாம், FASD என்னும் கருவில் ஏற்படும் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உடைய சிறுவன் என்றும் சொல்லப் படுகிறது.