கணவன் குடும்பத்தினரை விருந்துக்கு அழைத்து விஷ காளானை சமைத்து கொடுத்து மூவர் உயிரிழந்த நிலையில் எரின் பேட்டர்ஸன் என்ற ஆஸ்திரேலிய பெண் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், லியான்கத்தா பகுதியைச் சேர்ந்த எரின் பேட்டர்ஸன், கணவரான சைமன் பேட்டர்ஸனைப் பிரிந்து தமது இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். பிரிந்து வாழ்ந்தாலும், கணவருடனும், கணவர் வீட்டாருடனும் நட்புடன் இருந்த அவர், தமது மாமனார் டான் பேட்டர்ஸன், மாமியார் கெயில் பேட்டர்ஸன், மாமியாரின் தங்கை ஹீதர் வில்கின்ஸன் மற்றும் அவரது கணவர் இயான் வில்கின்ஸன் ஆகியோரையும் தமது முன்னாள் கணவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறார். சைமன் அழைப்பை ஏற்காத போதிலும், வயதில் பெரிய உறவினர்கள் நால்வரும் விருந்தில் கலந்து கொண்டனர். ஒரு முக்கியமானப் பிரச்சினையைப் பற்றி பேசவே தான் அவர்களை அழைத்ததாகக் கூறிய எரின் தனக்கு கேன்ஸர் வந்திருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்து தான் பயப்படுவதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு கவலையுற்ற பெரியவர்கள் ஆறுதல் சொல்லி ப்ரார்த்தனையும் செய்துள்ளனர். விருந்தில் பீஃப், காளான் உள்பட பலவிதமான உணவு வகைகளை பரிமாறினார் எரின்.
விருந்து முடிந்து வீடு திரும்பியவர்கள் நால்வரும் வாந்தி மயக்கம் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் அவர்கள் “டெத் கேப் மஷ்ரூம்” என்னும் விஷக் காளான் சாப்பிட்டிருக்கலாம் என்று உறுதி செய்யப் பட்டது. சிகிட்சை பலனளிக்காமல் டொனால்ட் பேட்டர்ஸன்(70) கெயில் பேட்டர்ஸன் (70) மற்றும் ஹீதர்ட் வில்கின்ஸன் (66) உயிரிழந்த நிலையில், இயான் வில்கின்ஸன் (68) மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிட்சை பெற்று வந்தார். காளான் விருந்து படைத்த எரின்பேட்டர்ஸன் கைது செய்யப் பட்டார். 2023ஆம் ஆண்டு தொடுக்கப் பட்ட இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது. விசாரணையின் எட்டாம் நாளான இன்று எரின் பேட்டர்ஸனின் 9 வயது மகள் விசாரிக்கப் பட்டார்.
எரின் பேட்டர்ஸன் தாம் சமைத்தது விஷக் காளான் என்று தனக்குத் தெரியாது என்றும் அதை சாப்பிட்ட பின் தானும் சுகவீனமடைந்ததாகவும் கூறினார். ஆனால்,விருந்தின் போது அவர் மட்டும் வித்தியாசமான ஒரு தட்டில் உணவு சாப்பிட்டதை விருந்தினர் கவனித்திருந்தனர்.
அது மட்டுமல்ல, நடந்த விசாரணையில் அவரது தோழிகளும் பல தகவல்களை தெரியப்படுத்தியுள்ளனர். கணவரைப் பிரிந்து வாழும் எரின் பார்க்க அமைதியாகக் காணப்பட்டாலும், மனதில் அமைதியின்றியே வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. கடவுள் நம்பிக்கையற்ற இவருக்கும், கிறிஸ்தவ போதகரான கணவருக்கும் அடிப்படையிலேயே கருத்து வேறுபாடு இருந்து வந்தது என்பது தோழிகள் கொடுத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இறந்து விட்ட மாமனாரும், உயிர் தப்பிப் பிழைத்த சிறிய மாமனாரும் கூட கிறிஸ்தவ மத (பேப்டிஸ்ட்) போதகர்கள் என்று தெரிகிறது.
நீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.