விலங்குலகில் மிகவும் புத்திசாலி எனக் கருதப்படும் டால்ஃபின்களின் அறிவுத் திறன் ஒவ்வொரு ஆய்விலும் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தின் அடுத்தபடிக்கு அழைத்து செல்கிறது.
ஒரு புதிய ஆவணப் படத்திற்காக படமெடுக்கப் பட்ட அசாதாரணமான காட்சிகளில் சிறப்பான அறிவுத் திறனுடன் அவை ஒன்றாக சேர்ந்து போதையேற்றிக் கொள்ளும் நிகழ்வு பதிவாகி உள்ளது.
இந்த லாகிரிவஸ்து அளவுக்கதிகமானால் விஷமாகி விடும் தன்மையுடையது ஆனாலும், சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது திருப்தியான ”கிக்” கொடுக்கக் கூடியது போலும். அந்த சரியான அளவு எவ்வளவு என்பது இந்த டால்ஃபின்களுக்குத் தெரிந்திருப்பது தான் நம்மை வியக்க வைக்கிறது.
பிபிசி சேனலுக்காக “ஸ்பை இன் தெ பாட்” என்ற ஆவணப்படத்தை எடுக்கும் குழு, கூட்டமாக வந்த டால்ஃபின்கள் ஒவ்வொன்றாக, ஒரு பஃபர் மீனை மெதுவாக கடித்த பின் அதை பக்கத்திலிருக்கும் டால்ஃபின்களை கொடுக்க
கூட்டம் முழுவதும் பஃபர் மீன் தற்காப்புக்காக வெளியிடும் விஷத்தை உறிஞ்சிக் கொள்கிறது. சரியான அளவில் உறிஞ்சியதும், பஃபர் மீனை விட்டுவிட்டு அப்படியே வாய்ப்பகுதி மட்டும் நீர் மட்டத்திற்கு மேல் தெரிய, ஆனந்த சாகரத்தில் மிதக்கின்றன.
இந்த தொலைக்காட்சித் தொடரின் இயக்குனராக பணியாற்றிய ராட் பில்லி என்னும் உயிரியலாளர், ”இளம் டால்ஃபின்கள் விஷத் தன்மை உள்ள ஒன்றை போதையேற்றிக் கொள்வதற்காக பரீட்சார்த்தமாக பயன்படுத்திப் பார்ப்பது இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களில் ஒன்று” என்றார்.
மேலும், “சில வருடங்களுக்கு முன், சிலர் ஒரு வகை தவளையை நக்கி, போதையேற்றிக் கொண்டதை இது நினைவுபடுத்துகிறது” என்றும் கூறினார்.