அமெரிக்காவில் விஸ்கான்ஸின் காவல்துறையினர் தன் 15 வயது மகளுக்கு செமி அட்டோமேட்டிக் துப்பாக்கி பரிசளித்த தந்தையை கைது செய்தனர்.
15 வயது மகள் பள்ளியில் ஒரு ஆசிரியரையும் சக மாணவரையும் சுட்டு வீழ்த்தி விட்டு தற்கொலை செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.
விஸ்கான்ஸினில் மத்தீஸன் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஜெஃப்ரி ரப்னவ். இவர் தனது மகள் நட்டாலி ரப்னவ், பெற்றோரின் விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்துடன் மிகுந்த வேதனையோடு, “மனிதகுலத்துக்கு எதிரான போர்” என்று ஒரு கட்டுரையை எழுதியதைப் பார்த்த போது, மகளது நிலையைக் கண்டு பரிதவிப்புடன் அவரை உற்சாகப் படுத்தும் நோக்கத்தில்
அவருக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாகத் தெரிகிறது. மகள் வெகு சிரத்தையாக திட்டமிட்டு, அட்டையினால் பள்ளிக் கூடத்தில் மாதிரியைச் செய்து எப்படி தாக்குதல் நடத்தி முடிவில் தான் எப்படி தற்கொலை செய்து கொள்ளவெண்டும் என்றும் தீர்மானிக்க இது ஊக்கமருந்தாக இருந்தது என்பது புகார் அளித்தவர்களின் குற்றச் சாட்டு.
நேற்று (8.5.2025) அன்று கைது செய்யப் பட்ட ஜெஃப்ரி, ஜேன் மாவட்ட சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டார். 18 வயது நிரம்பாத சிறுமிக்கு ஆபத்தான ஆயுதத்தைக் கொடுத்தது மற்றும் அவர் குற்றம் செய்ய காரணமாக இருந்தது என்ற இரு புகார்கள் அவர் மேல் பதிவு செய்யப் பட்டன.
கடந்த ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி, நட்டாலி ரப்னவ் மத்தீஸனில் உள்ள “அபண்டண்ட் லைஃப் க்றிஸ்டியன் ஸ்கூல்” என்னும் பள்ளியில் நுழைந்து, எரின் மிஷல் என்ற ஆசிரியையும், 14 வயது மாணவியான ரூபி பெர்கராவையும் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். புலனாய்வாளர்கள் அந்த அறையில் சுமார் 20 குண்டுகள் வரையிலும் சுடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
நட்டாலியின் அறையில் ஜெஃப்ரி அவருக்கு வாங்கிக் கொடுத்த 9எம் எம் க்ளாக் ஹேண்ட்கன்னும், அவர் வைத்திருந்த பையில் .22-காலிபர் ஸிக் ஸோர் பிஸ்டலும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
2023 ஆம் ஆண்டு ஜெஃப்ரி இவற்றை தமது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்ததாக புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மன அழுத்தத்தில் இருக்கும் பதின்ம வயது மகளுக்கு துப்பாக்கியைக் கொடுக்க ஒரு தந்தை தீர்மானித்தது ஏன்?
2022ஆம் ஆண்டு நடந்த பெற்றோரின் விவாகரத்து நடாலியை மிகவும் பாதித்ததாகவும், அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிட்சை மேற்கொண்டிருந்ததாகவும் கூறிய ஜெஃப்ரி, ஒரு விடுமுறையின் போது தற்செயலாக, துப்பாக்கிச் சூடுவதில் மகளுக்கு இருந்த விருப்பத்தைக் கண்டு, துப்பாக்கி வாங்கிக் கொடுத்து அவளை உற்சாகப் படுத்தி தன்பக்கம் சேர்த்து மகிழ்ச்சியாக வாழ வைக்கும் ஒரு சராசரி தகப்பனின் ஆதங்கம் தான் என்று கூறினார்.
விளையாட்டாகத் தொடங்கிய பொழுதுபோக்கு, மூவர் உயிரைக் குடிக்கும் வகையில் வினையானது விதியின் விளையாட்டு தான்.
கையில் துப்பாக்கியுடன், நடாலி ரப்னவ். பள்ளிக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவங்களை ஆன்லைனில் தேடி வாசித்திருக்கிறார். அது தொடர்பான நபர்களைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இறுதியில் தன் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியும் இருக்கிறார்.
விவாகரத்துகளும், வளர்ப்புப் பாணிகளும் சமூக அவலங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
.