உலகின் முதல் கணினி என்று நம்பப்பட்ட ஆண்டிகிதேரா பொறிமுறை( Antikythera Mechanism) 1901 ஆம் ஆண்டு மே 17 ல் (இதே நாளில்) கிரேக்கத் தீவான ஆண்டிகிதேரா கரையில் ஒரு கப்பல் இடிபாடுகளுக்கிடையில் கண்டுபிடிக்கப் பட்டது. ஒரு வருடத்திற்குப் பின் அதில் ஒரு கருவியமைப்பு இருப்பதை, கிரேக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வலேரியோஸ் ஸ்டெயிஸ் கண்டறிந்தார்.
உலகின் மிகப் பழமையான "கணினி" என்று குறிப்பிடப்படும் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கருவி, எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்த விஞ்ஞானிகள் அதை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
1901 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் ரோமானிய கால கப்பல் இடிபாடுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆன்டிகிதெரா பொறிமுறை நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கையால் இயங்கும் இந்த பண்டைய கிரேக்க சாதனம் கிரகணங்கள் மற்றும் பிற வானியல் நிகழ்வுகளை கணிக்கப் பயன்படுத்தப் பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆனால் அந்த சாதனத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைத்திருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் அது எவ்வாறு வேலை செய்தது, எப்படி இருந்தது என்று மூளையைக் கசக்கிக் கொண்டனர்.
முன்பே செய்யப் பட்ட ஆய்வுகளின் தீர்வுகள் மூலம், இந்த பொறிமுறையின் பின்புறத்தை சரி செய்து விட்ட போதிலும், முன்புறத்தில் உள்ள சிக்கலான பற்சக்கர அமைப்பின் தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (UCL) விஞ்ஞானிகள் 3D கணினி மாடலிங் மூலம் ஒருவழியாக இந்த புதிரைத் தீர்த்துவிட்டதாக நம்புகிறார்கள். பொறிமுறையின் முழு முன் பலகத்தையும் மீண்டும் உருவாக்கியுள்ள அவர்கள், இப்போது நவீன பொருட்களைப் பயன்படுத்தி ஆன்டிகிதெராவின் முழு அளவிலான பிரதியை உருவாக்கிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கிரேக்கத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் முழு ஆன்டிகிதெரா பொறிமுறையின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே உள்ளது.
இந்த மூன்றில் ஒரு பங்கும், 80 க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய துண்டுகளால் ஆனது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த பொறியமைப்பின் நுண்ணிய விவரங்கள் மற்றும் சிக்கலான பகுதிகளைக் காட்டும் பற்சக்கர அமைப்பின் புதிய காட்சியை தங்கள் ஆய்வறிக்கையாக வெளியிட்டனர்.
இந்த ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் டோனி ஃப்ரீத் "சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் இருப்பிடத்தையும், இயக்கத்தையும் இவை காட்டும் விதம் பண்டைய கிரேக்க அறிவுத் திறனை வெளிச்சமிட்டு காட்டுகிறது” என்றார்.
"நாங்கள் அமைத்திருக்கும் இந்த முதல் மாதிரி இயந்திரம் தான், பழைய சாதனத்தில் பொறிக்கப்பட்டிருந்த அறிவியல் குறிப்புகளில் உள்ள வருணனைகளை முழுமையாக ஒத்திருப்பதோடு, எல்லா இயற்பியல் ஆதாரங்களுடனும் ஒத்துப்போகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
ஆன்டிகிதெரா பொறிமுறை உலகின் பழமையான கணினி என்று நம்பப்படுகிறது.
இந்த பொறிமுறை ஒரு வானியல் கால்குலேட்டர் மற்றும் உலகின் முதல் அனலாக் கணினி என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கிறார்கள். வெண்கலத்தால் ஆன இதில் ஏராளமான கியர்கள் உள்ளன.
பின்புறத்தில், விளக்கப் பட்டிருக்கும் பிரபஞ்ச காட்சியில் இந்த சாதனம் செய்யப் பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருந்த ஐந்து கிரகங்களின் இயக்கமும் காட்டப் பட்டுள்ளது.
ஆனால் சாதனத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள 82 துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளதால், ஆராய்ச்சியாளர்கள், எக்ஸ்-ரே தரவு மற்றும் ஒரு பண்டைய கிரேக்க கணித முறையைப் பயன்படுத்தி முழு படத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டியிருந்தது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் முதல் ”கணினி”
schedulePublished May 17th 25