புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற இலட்சியத்தை முன் வைத்து இலங்கையில் தமிழீழ விடுதலைப் போரை தலைமை ஏற்று நடத்தியவர் பிராபகரன்.
அவர் வீர மரணம் அடைந்தாரா அல்லது எங்கேனும் தலைமறைவாக வாழ்ந்து வருகிறாரா என்ற சர்ச்சை கடந்த பதினைந்து ஆண்டுகளாக மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலமையில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு முதன் முதலாக வீரவணக்க நிகழ்வு புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கப் படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய தமிழகத்தின் பழ நெடுமாறனும் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும், இரு ஆண்டுகளுக்கு முன்னர் ’விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் விரைவில் வெளிவருவார்’ என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர்.
இது உலகம் முழுக்க பரவி வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் பழ நெடுமாறன் கருத்தை ஆமோதிக்க, இன்னும் சிலரோ பழ நெடுமாறன் காசி ஆனந்தன் போன்றோர் பிரபாகரன் மறைவிற்கு பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புலிகளின் சொத்துக்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சிலரின் தூண்டுதலாலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.
அதாவது விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த கால கட்டத்தில் தங்கள் நிதி வளத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் பல தொழில் நிறுவனங்களை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.
புலம் பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சிலர்தான் இந்த நிறுவனங்களை முழுமையாக நிர்வகித்து வந்தனர்.
விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் போராளி இயக்கமாகவும் இருந்ததால் இந்த நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட தனி நபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தன.
2009 முள்ளிவாய்கால் முடிவிற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின் புலிகளின் சொத்துக்களை கையாண்ட பலரும் அவற்றை தம் சொந்தமாக்கிக் கொண்டனர்.
அதேசமயம் இலங்கையின் தமிழ் பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் பரிதாப நிலையில் நடை பிணங்களாக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட, அதைக்கண்ட புலிகளின் ஆதரவாளர்கள் பலரும் நிலமையை சுட்டிக்காட்டி வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவலாமே என்று யோசனை தெரிவிக்க, புலிகளின் சொத்துக்களை வைத்திருப்போர் ’தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அவர் வந்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லுவது? அதனால் தலைவர் வரும்வரை காத்திருப்போம் என்று சொல்லிவிட்டனர்.
இந்த நபர்களுக்கு ஆதரவாகத்தான் பழ.நெடுமாறன் காசி.ஆனந்தன் போன்றோர் செயல்படுவதாக புலம் பெயர் அமைப்புகள் சில குற்றம் சாட்டின.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவு பெற்று பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு நினைவஞ்சலி செலுத்த எந்த அமைப்பும் முன்வரவில்லை. இந்த நிலைமையில் முதன் முதலாக மேதகு பிரபாகரன் நினைவெழுச்சி அமைப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செய்யும் நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சுவிசர்லாந்த் ஆஸ்திரேலியா இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் இந்த வீரவணக்க நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.