அமெரிக்கா என்னும் தங்க டாய்லெட்!

thumb_upLike
commentComments
shareShare

அமெரிக்கா என்னும் தங்க டாய்லெட்!

18 கேரட் தங்கத்தில், முழுமையாக பயன்படுத்தக் கூடிய வகையில் செய்யப் பட்ட டாய்லெட். ஆம், உண்மை தான், முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப் பட்ட கழிவறைத் தொட்டி.
2016ல் இதை உருவாக்கிய இதாலிய கலைஞர் மொரீஸியோ கேட்டலைன் இதற்கு இட்ட பெயர் - ”அமெரிக்கா”இதை வாசிக்கும் போதே உங்கள் முகத்தில் புன்சிரிப்பு விரியலாம். நையாண்டிக் கலைக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு என்றே சொல்லலாம்.
நியூ யார்க்கில் உள்ள சாலமன் ஆர். ககன்ஹெய்ம் அருங்காட்சி யகத்திற்காகவே இதை செய்த கேட்டலைன், ஃப்ளாரன்ஸில் உள்ள உருக்காலையில் இதை ஏழு பகுதிகளாகச் செய்து, ஒன்றாக சேர்த்து வெல்ட் செய்திருந்தார். அருங்காட்சியகத்திற்கு வரும் வருகையாளர்கள் பயன்படுத்துவதற்காக இது அங்கிருந்த ஒரு கழிவறையில் பொருத்தப் பட்டிருந்தது. இதை சுத்தம் செய்வதற்காக சிறப்பு கால அட்டவணை இருந்ததாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க தனியார் நிறுவனம் ஒன்று நிதியுதவி அளித்தததாகவும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவிக்கிறது.

”அமெரிக்கா” என்னும் இந்த டாய்லெட்டை பயன்படுத்துவதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் பதிவு செய்து காத்திருந்ததாகவும், கழிவறைக்கு வெளியே அதற்காகவே செக்யூரிட்டி போடப் பட்டிருந்ததாகவும் சொல்லப் படுகிறது.
103 கிலோகிராம் எடையுள்ள 18 கேரட் தங்கத்தால் செய்யப் பட்ட இது 2019 ல் 40லட்சம் டாலருக்கு அதிகமான மதிப்புள்ளதாக இருந்தது என்றும் கலைப்பொருளாக அதை மதிப்பிடும் போது, அதன் விலை 60 லட்சம் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடலாம் என்றும் கேட்டலைன் கூறினார்.
இதன் கலையழகோ, விலைமதிப்போ அது சொல்ல வந்த செய்தியோ, கொடுக்காத பிரபலத்தை, அது திருட்டு போன பிறகு தான் அது அடைந்தது என்று சொல்லலாம். நியூ யார்க்கில் உள்ள சாலமன் ஆர். ககன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் நிரந்தரக் காட்சிப்பொருளாக இருந்த இது, இங்கிலாந்தில் உள்ள ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் தற்காலிகமாக காட்சிக்கு வைக்கப் பட்ட போது தான் 2019ல் அந்த திருட்டு நடந்தது. திருடியவர்கள் அதை உடைத்து உருக்கி விற்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்திருந்த வேளையில் இந்த ஆண்டு இந்த திருட்டில் தொடர்புடைய மூவர் இங்கிலாந்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இது பற்றி தெரிய வந்துள்ள மூன்று விஷயங்கள்:
2019, செப்டம்பர் 14 அன்று நடந்த இந்த திருட்டின் போது திருடர்கள், பெரிய கடப்பாரைகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, ஆக்ஸ்ஃபோர்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ப்ளென்ஹெய்ம் அரண்மனையின் தரையை உடைத்து இதை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதை எடுத்துச் செல்ல அவர்களுக்கு வெறும் ஐந்து நிமிடங்களே ஆயின.
பிடிபட்ட திருடர்களில் ஒருவர் 39 வயதான மைக்கேல் ஜோன்ஸ் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், மற்றொருவரான 36 வயது ஃப்ரெட் டோ திருடிய பொருளை கடத்தும் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளார்.

பின்னர் கைதான, 40 வயதான ஜேம்ஸ் ஷீன் என்பவர் இந்த கொள்ளையை நடத்த சதித் திட்டம் தீட்டியதாகவும், கொள்ளை, சதியாலோசனை மற்றும் திருடிய பொருளை கடத்திய குற்றம் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார்.
60 லட்சம் டாலருக்கு காப்பீடு செய்யப் பட்ட இந்த தங்க டாய்லெட் இன்னும் கிடைக்கவில்லை. அது உடைக்கப் பட்டு துண்டு துண்டாக விற்க பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். கொள்ளைச் சம்பவத்திற்கு முன் தினம் அருங்காட்சியகத்திற்கு வந்து அதை பயன்படுத்தியதாக கூறும் ஜோன்ஸ், அந்த அனுபவம்” அற்புதமாக” இருந்ததாகவும் கூறினார்.

ஃப்ரெட் டோ , ஜோன்ஸ், ஷீன் இவர்கள் மீதுள்ள வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் தீர்ப்பு வழங்கப் படவில்லை.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close