சூட்டிலிருந்து தப்ப உடலை சுருக்கிக் கொள்ளும் மீன்கள்.!

thumb_upLike
commentComments
shareShare

சூட்டிலிருந்து தப்ப உடலை சுருக்கிக் கொள்ளும் மீன்கள்.!

சூடாகும் கடல்நீரில் வாழ்வதற்காக, தங்கள் உடலின் அளவைச் சுருக்கிக் கொள்கிறது, க்ளவுன் ஃபிஷ் என்ற வகை மீன்.
பப்புவா நியூ கினியாவை அடுத்த கடற்கரைப் பகுதியில் வெயில் காலங்களிலில் இங்குள்ள சில ஆரஞ்சு வரிகள் உடைய க்ளவுன் ஃபிஷ் வகை மீன்கள் தங்கள் உடல்களைச் சுருக்கிக் கொள்வதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.
மாறி வரும் காலநிலைகளால் கோடைகாலங்கள் கடுமையாகவும், நீருக்கடியில் வெப்பம் மிக அதிகமாகவும் இருக்கும் போது, வெயிலில் சூடேறிவிட்ட கடல்நீரில் இந்த ஆரஞ்சு நிற க்ளவுன் ஃபிஷ் குடியிருக்கும் கூடாரமான கடல்சாமந்திக் கூட்டங்கள் (ஸீ அனிமோன்) தாக்குப் பிடிப்பதில்லை. தங்க இடமில்லாத இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக இந்த மீன்கள் சில தகவமைப்புகளை கையாள வேண்டி உள்ளது.
2023ல் கோடைகாலத்தில் கிம்பே வளைகுடா பகுதியில் வண்ணமயமான 134 க்ளவுன் ஃபிஷ்களை விஞ்ஞானிகளை கண்காணித்து அவற்றின் உடலளவை அளந்த போது, அவற்றில் 101 மீன்களின் நீளம் குறைந்து கொண்டே வருவதை கவனித்தனர்.
போஸ்டன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மார்கன் பெனட்-ஸ்மித் இது பற்றிக் கூறுகையில், “இந்த மீன்கள் சுருங்கிக் கொண்டே வருவதை கவனித்த போது எங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது” என்றார். இந்த கண்டுபிடிப்பு, சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற அறிவியல் பத்திரிகையில் நேற்று வெளியானது.
இந்த மீன்கள் எப்படி தங்கள் உடலை சுருக்குகின்றன என்பது இன்னும் முழுமையாக தெரியாவிட்டாலும், அவை தங்கள் எலும்பிலுள்ள பொருட்களை தாங்களே ஓரளவு உறிஞ்சி எலும்பின் நீளத்தைக் குறைத்துக் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடினமான வெயில் காலத்தில் உடல் சிறியதாக இருந்தால் மீன்களால் சக்தியை மிச்சப்படுத்த முடியும். உணவும் குறைவாக சாப்பிட்டால் போதும், இல்லையா?
இதைப் போல, வேறு சில மிருகங்களும், வெப்பத்தை தாக்குப் பிடிப்பதற்காக தங்கள் உடலை சுருக்கிக் கொள்கின்றன. பெருங்கடல்களின் மேற்பரப்பு குறிப்பிட்ட காலங்களில் அதிக அளவு சூடாக இருப்பதை எல் நினோ நிகழ்வு என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். இந்த காலங்களில் கடல்வாழ் இகுவானாக்களும் உடலை சிறிதாக்கிக் கொள்கின்றன. ஆனால் இதுவரை கடற்சாமந்திகளில் வாழும் க்ளவுன் ஃபிஷ் வகைகளில் இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் கண்டதில்லை.
“மாறிக் கொண்டே இருக்கும் பூமி வாழ்க்கையை கையாள மீன்கள் வைத்திருக்கும் சூட்சுமங்களில் இன்னொரு புதிய சூட்சுமம் இது” என்கிறார், வுட்ஸ் ஹோல் கடலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கடல் சூழ்நிலை ஆய்வாளர் சைமன் தோரோல்ட்.
“இந்த உத்தி குறுகிய காலத்திற்கு வெப்பத்திலிருந்து தப்பிக் கொள்ள இந்த மீன் வகைக்கு உதவலாம். ஆனால், இது நீண்டகாலத்திற்கு பயனளிக்குமா என்பது தெரியவில்லை” என்கிறார் அவர்.
ஆனால், இந்த உத்தி தற்காலிகமானது தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சூழ்நிலையில் வெப்பமும் இறுக்கமும் குறைந்து, சூழல் இயல்புக்கு திரும்பியதும், இந்த க்ளவுன் ஃபிஷ் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விடுகின்றன.
”.. இது உயிரினங்கள் மாறிக் கொண்டே இருக்கும் பூமியில் வாழ எப்படி தங்களை தகவமைத்துக் கொள்கின்றன என்று காட்டுகிறது” என்கிறார் நியூகாசில் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மெலிஸா வெர்ஸ்டீக்.
பூமியின் உயிர் அமைப்புகள் எத்தனை நெருக்கடிகளை சந்தித்தாலும், துவண்டு விடுவதில்லை. ”மீண்டும் எழுவோம்” என்பது தான் இயற்கையின் தாரக மந்திரமாக இருக்கிறது என்பது வியக்க வைக்கிறது இல்லையா?

NewsGlitz in Social Media
Share to your pages!
Close