திருஷ்யம் திரைப்படப் பாணியில் தடயங்களை மறைத்த கொலையாளி...!

thumb_upLike
commentComments
shareShare

திருஷ்யம் திரைப்படப் பாணியில் தடயங்களை மறைத்த கொலையாளி...!

கேரளமநிலம் காசர்கோடு அருகே பதினாறு வயது சிறுமியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வசப்படுத்து ,பாலியல் ரீதியாக பயன்படுத்தி பின்னர் கொலை செய்து சடலத்தை மறைத்த குற்றத்திற்காக பைஜு பவுலோஸ் என்ற ஐம்பத்திரெண்டு வயது தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசர்கோடு எண்ணப்பாலம் பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ரேஷ்மா. பழங்குடி சமுகப் பெண்ணான ரேஷ்மா பள்ளியில் படிக்கும்போதே உள்ளூர் மெல்லிசைக் குழுக்களில் பாடல்கள் பாடி வந்தார். அப்போது அதே பகுதியை சார்ந்த மேடைப் பாடகர் பைஜு பவுலோஸ் என்பவரது அறிமுகம் ரேஷ்மாவுக்கு கிடைத்தது.

சமுக பின்னணி இல்லாத பாமர பழங்குடி சமுகத்து சிறுமியான ரேஷ்மாவுக்கு மொபைல் போன் ஒன்றை வாங்கித் தந்த பவுலோஸ்.
தொடர்ந்து அவளுடன் அக்கறையாக பேசி அவளுக்கு பல்வேறு உதவிகளை செய்து நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார்,
தொழிலதிபரான பவுலோஸுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளாக ரேஷ்மாவுக்கு உதவிகள் செய்வது போல நடித்து அவளது நம்பிக்கையை பெற்ற பவுலோஸ், ரேஷ்மா பன்னிரெண்டாம் வகுப்பு படித்ததும் அவளை அருகே உள்ள நகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டதோடு அவளுக்கு தனியாக வீடொன்றையும் எடுத்து தங்க வைத்துளார். அந்த வீட்டில் பவுலோஸ் அந்த மாணவியுடன் தங்குவதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.
இந்த நிலமையில் மாணவி ரேஷ்மா கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி காணாமல் போனார்.
காணாமல் போன அன்று ரேஷ்மாவின் செல்போனிலிருந்து அவளது தந்தைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர போனை எடுப்பதற்குள் அடுத்த கணமே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால் அடுத்த வினாடியே ரேஷ்மாவின் போனிலிருந்து அவளது தந்தையின் நண்பரின் எண்ணுக்கு அழைத்து, தன்னை ரேஷ்மா என அறிமுகப் படுத்திக் கொண்ட ஒரு பெண் குரல், தனக்கு கொச்சி வோடபோன் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் அதனால் தான் கொச்சிக்கு போவதாகவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் இந்த தகவலை அப்பாவிடம் தெரிவிக்குமாறும் கேட்டிருக்கிறது.
இரண்டு மூன்று மாதகாலம் கழித்தும் ரேஷ்மா வீட்டை தொடர்பு கொள்ளாததால் அவளது தந்தை ராமன் தன் மகளைக் காணவில்லை என்று 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் காவல்துறையில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
விசாரணை நடத்திய காவலர்கள் ரேஷ்மாவின் பெற்றோர் தந்த தகவலின் பேரில் பைஜு பவுலோஸை விசாரிக்க ஆரம்பித்தனர். ரேஷ்மா காணாமல் போன நாளன்று அவளது செல்போனிலிருந்து பவுலோசுக்கு 37 முறை தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன.மேலும் காணமல் போன தினத்தில் இருவரின் செல் போன்களும் நீண்ட நேரம் ஒரே டவர் லொகேஷனில் இருந்திருக்கின்றன.
ரேஷ்மாவை என் தாய்க்கு உதவியாக வீடு எடுத்து வைத்திருந்தேன் அவள் வேறு வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு போய் விட்டாள் என்ற பவுலோஸின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் யாரும் நம்ப தயாரில்லை.
போலிசின் சந்தேகக் கண்கள் பவுலோசின் மீது படிந்திருந்தாலும் மேற்கொண்டு தன் மீது விசாரணை வளையம் நெருங்காதபடி ஒவ்வொரு கட்டத்திலும் கேரள உயர் நீதிமன்றத்தை நாடி பல்வேறு தடைகளைப் பெற்று தப்பித்துக் கொண்டிருந்தார் பவுலோஸ்.
பவுலோஸ்தான் ரேஷ்மாவை கொன்று மறைத்திருக்கலாம் என்று காவல்துறை கருதினாலும் நேரடியாக அவரை கைது செய்யவோ சட்த்தின் முன் நிறுத்தவோ காவல் துறையால் முடியவில்லை.
சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கி வழக்கின் விசாரணையிலிருந்து தப்பித்த பவுலோஸ் கத்தார் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையில் ரேஷ்மா காணமல் போன அதே காலகட்டத்தில் காசர் கோடு கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை கண்டெடுத்த காவலர்கள் அதன் சில பாகங்களை பத்திரப் படுத்தி விட்டு மிச்சத்தை அனாதை பிணம் என்று புதைத்து விட்டனர்.
2011 ஆம் ஆண்டு ரேஷ்மாவை காணவில்லை எனவும் அவரைக் கண்டுபிடிக்க கோரியும் ரேஷ்மாவிம் தந்தை கொடுத்த வழக்கு நீர்த்துப் போன நிலையில், சில பழங்குடி அமைப்புகளின் முயற்சியில் ரேஷ்மா காணாமல் போன வழக்கில் கேரள போலிசின் விசாரணை திருப்திகரமாக இல்லை எனவும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும் ரேஷ்மாவின் பெற்றோர் ஆள் கொணர்வு மனு ஒன்றை 2023 ஆம் ஆண்டு தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ரேஷ்மா வழக்கின் விசாரணையை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவொன்றை அமைத்து உத்தரவிட்டனர்.
இந்த காலகட்த்தில் இனி தனக்கு ஆபத்தில்லை எனக்கருதி கேரளாவுக்கு திரும்பி முன்னணி ஊடகம் ஒன்றில் பத்திரிகையளராகிவிட்ட பைஜு பைலோஸ் முன் ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க இந்த முறை காவல்துறை தந்த ரகசிய அறிக்கைகளைப் படித்து அதிர்ச்சியான உயர்நீதிமன்றம் அவரது முன் ஜாமின் மனுவை நிராகரித்தோடு மீண்டும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிடாதபடி அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி விட்டது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை வேகமெடுத்தது.
ரேஷ்மா காணாமல் போன காலகட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத பெண்களின் சடலங்கள் மீது சிறப்புப் புலனாய்வு பிரிவினர் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள்.

காசர்கோடு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டு பத்திரப்படுத்தப் பட்டிருந்த அந்த சடலத்தின் பாகங்களையும் ஆய்வு செய்தனர்.அந்த சடலத்தின் காலில் இருந்தாக பாதுகாக்கப்பட்ட கொலுசு ரேஷ்மாவுடையது என அவரது தாய் அடையாளம் காட்டினார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
டி என் எ பரிசோதனை முடிவில் காசர்கோடு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ரேஷ்மாவினுடையதுதான் என உறுதி செய்யப்பட்டது.
புலனாய்வு அதிகாரிகள் பவுலோசை மீண்டும் தீவிரமாக விசாரித்தனர். சிறுமியாக இருந்த ரேஷ்மா மீது அக்கறை காட்டுவது போல பழகி அவளுக்கு பல உதவிகள் செய்து வசப்படுத்தி, தன் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் பவுலோஸ். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்யுமாறு ரேஷ்மா வற்புறுத்த வேறு வழியில்லாமல் அவளை கொலை செய்து விட்டதாக கருதிய புலனாய்வு அதிகாரிகள் பவுலோசை கைது செய்தனர். அப்போது ’தான் ரேஷ்மாவை கொலை செய்யவில்லை என்றும் தான் வீட்டுக்கு வந்தபோது அவளது உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாகவும் ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டதால் தான் பயந்துபோய் அவளது உடலை எடுத்துப் போய் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சந்திரகிரி ஆற்றில் அமிழ்த்தி விட்டதாகவும் அந்த சடலம்தான் காசர்கோடு கடற்கரைக்கு நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டதாகவும் கூறியிருக்கிறார் பவுலோஸ்.
பவுலோசை விசாரித்த அதிகாரிகள் ரேஷ்மாவை கொன்று விட்டு அவளது மொபைல் போனை எடுத்த பவுலோஸ், அதில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றி பேசும் சீன ஆப்களை டவுன்லோடு செய்து, அந்த ஆப்கள் மூலமே ரேஷ்மாவின் அப்பாவின் தொலை பேசிக்கு முதலில் அழைத்திருக்கிறார்.

எங்கே ரேஷ்மாவின் அப்பா பேசுவது தன் மகளின் குரல் அல்ல என்பதை தெரிந்து விட்டால் எல்லாம் சிக்கலாகிவிடும் எனக் கருதிய பவுலோஸ் அடுத்த கணமே அழைப்பை துண்டித்துவிட்டு ரேஷ்மாவின் அப்பாவின் நண்பரின் செல்போனுக்கு அழைத்து தான் கொச்சிக்கு வோடபோன் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக ரேஷ்மா மாதிரியே பேசியதாக கண்டு பிடித்த அதிகாரிகள் தற்போது பவுலோசை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் திரிஷ்யம் திரைப்படம் வெளிவருமுன்பே அதே திரைப்பட பாணியில் கொலையை செய்து விட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கில் ரேஷ்மாவின் செல்போனை கொச்சிக்கு கொண்டு போய் அதை எங்கோ வீசியிருக்கிறார் பைலோஸ்.
பெரிய படிப்பு இல்லாவிட்டாலும் தன் நுண்ணறிவு மூலமாக கொலையும் செய்து விட்டு குற்றத்தை மறைக்க நினைத்த பவுலோஸை புத்திசாலியான கிரிமினல் என வருணிக்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
தற்போது பவுலோசை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளனர் காவல் துறையினர். இந்த விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என நம்புகிறார்கள் ரெஷ்மா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள்..

 

NewsGlitz in Social Media
Share to your pages!
Close