பொழுது போக்கிற்காக மலையேறிய இருவர் 3.7 கிலோகிராம் எடையுள்ள தங்கநாணயங்கள், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 100 வருட பழமையான நகைகளைக் கண்டுபிடித்தனர்.
செக் குடியரசின் க்ர்கோனோஸ் மலைப் பகுதியில் மலையேறிய இருவர் அன்று நரிமுகத்தில் விழித்திருக்க வேண்டும். மலைப்பகுதியில் உள்ள காட்டில் அவர்கள் நடந்து கொண்டிருந்த போது ஒரு மர்மப் பெட்டி அவர்கள் கண்களில் பட்டது. அதைத் திறந்து பார்த்த போது,அதில் தங்க நாணயங்களும், நகைகளும் மற்றும் பல பொருட்களும் நிறைந்திருந்தன.
அலுமினியத்தால் செய்யப் பட்ட அந்த பெட்டியில் 598 தங்க நாணயங்களும், 10 தங்க ப்ரேஸ்லெட்டுகளும், 17 சிகரெட் கேஸ்களும், ஒரு பவுடர் காம்பாக்ட்டும், ஒரு சீப்பும் இருந்தன. இவை அனைத்தும் சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த புதையல், ஆராய்ச்சிக்காக , ரெடக் க்ரலோவ் பகுதியிலுள்ள கிழக்கு பொஹீமியா அருங்காட்சியகத்திற்கு அனுப்பப் பட்டது.
தங்க நாணயங்களில் ஒன்று 1921 ஆம் ஆண்டு செய்யப் பட்டிருப்பதால், இவை அனைத்தும் அந்த காலக் கட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும், இரண்டாம் உலகப் போருக்கு முன் இருந்த மிக நெருக்கடியான சூழலில் செக் அல்லது யூதக் குடும்பங்களில் ஏதோ ஒன்று இந்த புதையலை மறைத்து வைத்திருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
அருங்காட்சியகத்தின் தொல்பொருள்துறையின் தலைவரான மிரோஸ்லவ் நோவக், “ புதையலை எடுத்தவர்கள் எந்த முன் அறிவிப்புமின்றி எங்கள் அருங்காட்சியகத்திலுள்ள நாணய நிபுணரைப் பார்க்க வந்த போது தான், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இது பற்றி தெரிய வந்தது. அதன் பின்னர் தான் நாங்கள் அந்த பகுதியை ஆராயக் கிளம்பினோம்” என்கிறார்.
”இது இரண்டாம் உலகப் போர் காலத்தில் எல்லைப் பகுதிகளை விட்டு புறப்பட்ட செக் அல்லது யூத மக்களோடு தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது. 1945ல் இங்கிருந்து ஜெர்மானியர்கள் புறப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
இந்த புதையல் ஏன் இங்க புதைக்கப் பட்டது என்பதற்கான காரணம் இன்னும் புதிராகவே உள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியை, புதையல் பொருட்களைப் பற்றி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிர்ஷ்டகரமான கண்டுபிடிப்பு நிபுணர்களையும் பொதுமக்களையும் ஒருசேர தன் பக்கமாக ஈர்த்துள்ளது என்னவோ உண்மை தான்.
இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த தங்க நாணயங்கள் பெரும்பாலும் பால்கன், ஃப்ரெஞ்சு நாணயங்களை ஒத்துள்ளன. செக் பகுதியைச் சேர்ந்த நாணயங்களோ, அல்லது ஜெர்மன் நாணயங்களோ இல்லாதது ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைக்கிறது. ஒரு ஆழமான ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் வலுவான ஆதாரங்கள் இவை என்றே அவர்கள் கருதுகின்றனர்.