போதைப் பொருள் கடத்துபவர்களை கண்டு பிடிக்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்துவது உலகம் முழுவதும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் ஒரு சிறைச்சாலைக்குள் பூனையின் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் பிடிபட்டதுடன் கடத்தலுக்கு உதவிய பூனையையும் கைது செய்திருக்கிறார்கள் சிறைக்காவலர்கள்.
கோஸ்டாரிகாவிலுள்ள போகோசி சிறைச்சாலையின் கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரி எரிக் தாமஸ் சிறைச்சாலையின் வெளிப்புறச் சுவற்றின் மீது பூனை ஒன்று சகவாசமாக நடந்து வருவதைக் கண்டார். அதன் தோற்றத்தின் மீது சந்தேகம் கொண்ட எரிக் இது பற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். காவலர்கள் உடனே அந்த பூனையை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட பூனையை காவலர்கள் பரிசோதனை செய்ததில் அதன் உடம்பில் அடையாளம் தெரியாத வகையில் உரோமத்தின் நிறத்தையொட்டிய துணி ஒன்று சுற்றப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த துணி உறையை கத்தரிக்கோலால் கிழித்துப் பார்த்தபோது அதற்குள் 236 கிராம் கஞ்சா மற்றும் 68 கிராம் ஹெராயின் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூனையை அருகே இருந்த உயிரியல் பூங்காவிற்கு அனுப்பிய அதிகாரிகள், இந்த பூனையை பயன்படுத்தி நீண்டகாலமாக சிறைக்குள் போதைப் பொருட் கடத்தல் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூனையை பயன்படுத்தி பொதைப் பொருட்களை சிறைக்குள் கொணர்ந்தவர்கள் யார் என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக அந்த பூனையின் நடமாட்டம் தொடர்பான பழைய சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.