டைவிங் போர்டில் முழங்கால்களில் நிற்கும் 15 வயது ஹேவன் ஷெபர்ட், ஆழமாக மூச்சு இழுத்துவிட்டு, தண்ணீருக்குள் பாய்கிறார்.
“தண்ணீருக்குள் இருக்கும் போது தான் நான் நானாக இருப்பதை உணர்கிறேன்” என்று கூறும் இவர், இரண்டு கால்களையும் இழந்த நிலையில், நாள் முழுவதும் அணிந்திருக்கும் செயற்கைக் கால்களிலிருந்து தண்ணீர் தான் தனக்கு விடுதலை கொடுப்பதாகக் கூறுகிறார்.
அமெரிக்காவின் மிஸௌரியிலுள்ள கார்தஜ் என்ற பகுதியில் பயிற்சி குளத்தில் நீந்தும் ஹேவன், வியட்நாமிய கிராமம் ஒன்றில் குண்டை வெடித்து தற்கொலை செய்ய துணிந்த குடும்ப பின்னணியிலிருந்து நெடுந்தூரம் பயணித்து வந்தவர். குண்டு வெடித்த போது, பெற்றோர் இறந்து விட, தூக்கியெறியப்பட்ட 14 மாதக் குழந்தையான ஹேவன் கால்களை இழந்த நிலையில் எப்படியோ உயிர்பிழைத்துவிட்டார்.
ஹேவனின் தாத்தாவும், பாட்டியும், வறுமை வாட்டிய நிலையில் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நன்கொடைகளையே நம்பி இருந்தனர். ஹேவனைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் இடம் பெற்றன.
அதே நேரத்தில் 13,000கிலோமீட்டர் தூரத்தில் அமெரிக்காவின் மிஸௌரியில் ஃப்ளோரிங் பிஸினெஸ் செய்து வரும் ராப்-ஷெல்லி தம்பதி தங்கள் ஆறு குழந்தைகளுடன் வசதியாக வாழ்கிறார்கள். பக்தியும், உதவும் குணமும் கொண்ட ஷெல்லிக்கு உதவியற்ற ஒரு குழந்தையை தத்து எடுக்கும் எண்ணமும் மனதில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், சமீபத்தில் சொந்த சகோதரனை விபத்தில் இழந்த துயரத்தில் வாடும் ராப் குழந்தைகளை தத்து எடுக்கும் மனநிலையில் இல்லை.
வியட்நாமில் வசிக்கும் அவர்களது நண்பர்களான பாமிலா-ராண்டி தம்பதி ஷெல்லி-ராப் தம்பதியை வியட்நாமுக்கு அழைக்கின்றனர். சமீபத்தில் ஒரே மகனை இழந்து தவிப்பவர்கள். புத்திர சோகத்திற்கு மருந்திடும் நோக்கில் அவர்கள் உருவாக்கிய “டச் த லைஃப்” என்ற அனாதை ஆசிரமத்திற்கு ராப்-ஷெல்லி தம்பதி வருகின்றனர்.
ஆசிரமத்தில் சேர்க்கமுடியாத ஒரு குழந்தையை அமெரிக்க தம்பதி யாராவது விரும்பினால் தத்து கொடுக்க ஏற்பாடு செய்யமுடியுமா என்று அவர்கள் ராப்= ஷெல்லி தம்பதியிடம் கேட்கிறார்கள். அந்த குழந்தை ஹேவன் தான். கால்களை இழந்த ஹேவனை ஆசிரமத்தில் சேர்க்கமுடியாத முடியாத நிலையில், குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் தத்து கொடுக்க முயற்சி எடுக்கப் படுகிறது.
”குழந்தையை கையில் வாங்கியதும் “இவள் என்னுடையவள்” என்று தான் எனக்குத் தோன்றியது” என்கிறார் ஷெல்லி. ஹேவனும் ராபின் கையை விட்டு இறங்க மறுக்கிறாள். ஆனால், ஒரே வாரத்தில் வேறொரு அமெரிக்க தம்பதி ஹேவனை தத்து எடுத்துக் கொள்ள பேப்பர் வொர்க், வீசா எல்லாம் முடித்து புதிய பெற்றோருடன் அமெரிக்கா சென்று விடுகிறாள், ஹேவன் ஷெபர்ட்.
கையிலிருந்த பொம்மையை யாரோ தட்டிப் பறித்த மனநிலையில், ஷெல்லி மனமுடைந்து போய் அமெரிக்கா திரும்புகின்றார். அடுத்த ஒரே வாரத்தில் திரும்பவும் பாமிலாவிடம் இருந்து அழைப்பு வருகிறது, ஹேவனை தத்து எடுத்தவர்கள், அவளை கவனிக்க முடியாமல் திருப்பி கொடுக்க வருகிறார்கள் என்று..!. அடுத்த சில மணி நேரங்களில், ஹேவன், ஷெல்லியின் அரவணைப்பில் மிஸௌரி வந்து சேருகிறாள்.
“அவள் எங்கள் வீட்டிற்குள் வந்ததுமே, எங்கள் குடும்பம் முழுமையானது போல நான் உணர்ந்தேன்,” என்று குரல் நடுங்க கூறும் ஷெல்லி, “ஆறு குழந்தைகள் உள்ள என் குடும்பத்தில் நான் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், அன்பு எப்போதுமே பெருகக் கூடியது. அதைப் பிரித்துக் கொடுத்து காலி பண்ண முடியாது. கொடுக்க கொடுக்க பெருகுமே தவிர காலியாகாது என்பது தான்”என்கிறார்.
”நவம்பர் 19 -அது தான் நான் என் குடும்பத்துடன் வந்த சேர்ந்த நாள்” என்று முகம் மலருகிறார், ராப்- ஷெல்லி ஷெபர்ட் தம்பதியின் அன்பு மகள் ஹேவன் ஷெபர்ட்.
“இரத்தத்தால் பிணைக்கப்பட்டது மட்டும் தான் குடும்பம் என்றில்லை; உங்களை உங்களுக்காக ஏற்றுக் கொள்பவர்கள், உங்கள் சிரிப்பைப் பார்ப்பதற்காக எதையும் செய்பவர்கள், எந்த நிலையிலும் உங்களை நேசிப்பவர்கள்- இவர்கள் தான் உங்கள் குடும்பம்” – மாயாஆங்கெலோ