சமாதானச் சின்னமாக அடையாளப்படுத்தப்படும் புறா, சில நேரங்களில் அளவுக்கதிகமாக அலைக்கழிக்கவும் செய்யும். நல்லதோ, கெட்டதோ நியூ யார்க் நகரின் நாடித்துடிப்பில் கலந்துவிட்ட இந்த மென்மையும், கம்பீரமும் நிறைந்த பறவைகளுக்கு அடுத்த மாதம் விழா எடுக்கும் தயாரிப்பில் இருக்கிறது அம்மாநகரம்.
நியூ யார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் மேற்கில் அமைந்துள்ள “த ஹை லைன்” என்னும் பூங்கா ஜூன் 14 ஆம் தேதி மதியத்திலிருந்து இரவு 8 மணிவரை புறா திருவிழாவை நடத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய புறா சிறப்பு தினத்தை ஒட்டி இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த பூங்காவின் இணையதள பக்கத்தில் ”இந்த பூங்காவில் அமைந்துள்ள சிற்பக் கலைஞர் இவான் அர்கோட்டின் 17 அடி உயர புறாவின் சிலை” இந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கு பெருந்தூண்டுதலாக அமைந்ததாக’ குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த பூங்காவின் நிர்வாக இயக்குனர் ஆலன் வான் கேபெல்ல,”இந்த திருவிழாவில் "புறாக்களைப் போல உடையணியும் மாறுவேடப் போட்டி, நகர்ப்புற சூழலியலும், பறவைகள் பாதுகாப்பும் பற்றிய உரைகள் ஆகியவையும் இடம்பெறும்” என்று கூறினார்.
இந்த நிகழ்வுகளில் ஸும்பா பாணி புறா நடன விருந்தும், பெரிய புறாவைப் போல உடையணிந்து பறவைகளுக்கு உணவளித்து நியூயார்க நகர வீதிகளில் பிரபலமாகிய “தாய்புறா” என்று செல்லமாக அழைக்கப்படும் டினா பினா ட்ராக்டென்பெர்க்கின் பொம்மலாட்ட நிகழ்ச்சியும் அடங்கும்.
“ புறாக்களை நீங்கள் நேசிக்கலாம்; வெறுக்கலாம். ஆனால், இந்த சிறகுள்ள நண்பர்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டவை.” என்று கூறும் வான் கேப்பல்லே “இந்த திருவிழா நியூயார்க் வாசிகள் கலை, இயற்கை அதுவும், குறிப்பாக புறக்களுடன் கொண்டுள்ள உயிரூட்டமுள்ள உறவைக் கொண்டாடும் மிக பொருத்தமான நிகழ்வு” என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.