இந்திய பெண் எழுத்தாளர் பானு முஷ்தக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி இருவரும், 12 சிறுகதைகள் அடங்கிய ”இதய தீபம்” (ஹார்ட் லாம்ப்) என்ற சிறுகதைத் தொகுப்புக்கு புக்கர் பரிசை வென்றுள்ளனர். 50 ஆயிரம் யூரோ பணப் பரிசு பெறும் இந்த சிறுகதைத் தொகுப்பு முதல்முறையாக கன்னடத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் 77 வயதான வழக்கறிஞரும், புரட்சியாளருமான பானு முஷ்தக் எழுதிய இந்த சிறுகதைகள் தென் இந்திய இஸ்லாமிய பெண்களின் தினசரி வாழ்க்கையையும், போராட்டங்களையும் சித்தரிப்பவையாக உள்ளன.
சிறுகதைத் தொகுப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவது இது தான் முதல் முறை என்பது இதன் கூடுதல் சிறப்பு. 2016ல் சிறுகதைத் தொகுப்பாக மொழிபெயர்க்கப் பட்ட இந்த படைப்பு, மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தியை, புக்கர் பரிசு பெறும் முதல் இந்திய மொழிபெயர்ப்பாளராகவும், ஒன்பதாவது பெண் மொழிபெயர்ப்பாளராகவும் ஆக்கியுள்ளது. 2016க்குப் பின், முஸ்தக் இந்த பரிசைப் பெறும் ஆறாவது பெண் எழுத்தாளர் ஆவார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட இந்த கதைத் தொகுப்பு, “யதார்த்தமான” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக நடுவர் மன்ற உறுப்பினர்கள் பாராட்டினர்.
”அழகிய, பரபரப்பான , உயிருட்டமுள்ள இந்த கன்னடத்துக் கதைகள் வேற்று மொழிகள் மற்றும் வட்டார மொழிகளின் அசாதாரணமான சமூக- அரசியல் செழுமையுடன் எழுதப் பட்டுள்ளன “ என பாராட்டிய நடுவர்கள்,” இது பெண்களின் வாழ்க்கை, அவர்களது இனப்பெருக்க உரிமைகள், பக்தி, ஜாதி, வலிமை, மற்றும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பேசுகின்றன” என்றனர்.
இறுதிச் சுற்றில் ஐந்து நூல்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற இந்த கதைத் தொகுப்பை மொழிபெயர்த்த தீபா பஸ்தி, தென் இந்தியாவின் பன்மொழித் தன்மையை தமது மொழிபெயர்ப்புகளில் பாதுகாப்பதில் தீவிர முனைப்புடையவர்.
வழக்கறிஞர்- எழுத்தாளரான பானு முஷ்தக், தமது கதைகளைப் பற்றி கூறும் போது, “எல்லாமே பெண்களைப் பற்றியவை. _ மதம், சமூகம், மற்றும் அரசியல் ஆகியவை அவர்களிடம் எவ்வாறு முழுமையான கீழ்படிதலை எதிர்பார்க்கிறது, அவர்கள் கீழ்படியும் போது, எவ்வாறு மனிதத் தன்மையற்ற கொடுமைக்கு ஆளாகி, வெறும் கீழ்நிலை பணியாளர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதைப் பற்றியவை தாம்” என்றார்.
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் பணப்பரிசை பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் தனித்தனியாக ட்ராஃபிக்களும் அளிக்கப் பட்டன.
சிறுகதை தொகுப்புக்காக புக்கர் பரிசு பெறும் இந்திய பெண் எழுத்தாளர் !
schedulePublished May 21st 25