சென்னை பரங்கிமலை அருகே கவுஸ்பாஜார் அரசு உயநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய பீகாரைச் சார்ந்த மாணவி ஜியா குமாரி நூற்றுக்கு தொண்ணூற்று மூன்று மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார்.
சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் வறுமை காரணமாக பீகாரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தார் ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி . சென்னையின் வாழ்க்கைத் தரம் பிடித்துப் போனதால் குடும்பத்தினரோடு சென்னையில் குடியேறிய அவர் தன் மூன்று மகள்களையும் இங்குள்ள அரசு பள்ளியிலேயே படிக்க அனுப்பினார்.
’நான் முதலாம் வகுப்பு முதலே இங்குதான் கல்வி கற்க ஆரம்பித்தேன்,, ஆரம்பத்தில் தமிழ் எனக்கு புரியவில்லை பின்னர் போகப்போக தமிழில் பேசவும் எழுதவும் பழக ஆரம்பித்து தமிழ் இப்போது எனக்கு விருப்ப மொழியாகிவிட்டது..’ என்று சொல்லும் ஜியா குமாரி சமுக அறிவியலிலும் ஆங்கிலத்திலும் தொண்ணூற்றி ஆறு மதிப்பெண்கள் பெற்றதுடன், மொத்தம் ஐநூறு மதிப்பெண்களுக்கு நானூற்றி அறுபத்தேழு மதிப்பேண்கள் பெற்றிருக்கிறார்.
பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜியா தனது உயர் கல்வியைத் தொடர திட்டமிட்டுள்ளார். "நான் பயோ-மேக்ஸ் பிரிவை எடுக்கிறேன், ஏனெனில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற விரும்புகிறேன். மூத்த சகோதரி கணிதத்துடன் கணினி அறிவியல் படிக்கிறார். ஏனெனில் அவர் JEE தேர்வில் வெற்றி பெற விரும்புகிறார்" என்று ஜியா கூறினார். ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு அறை கோண்ட வீட்டில் ஜியா வசிக்கிறார். தன் வறுமைச் சூழலிலும் சிறப்பான மதிப்பெண் பெற்ற ஜியாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழில் தொண்ணூற்று மூன்று வாங்கிய பீகார் மாணவி!
schedulePublished May 17th 25