கடலில் மிதந்த காலாவதியான காதல் கடிதம்!

கடலில் மிதந்த காலாவதியான காதல் கடிதம்!

கடலில் கடிதங்களை சுமந்து கொண்டு மிதந்து வரும் மர்மக் குப்பி களைப் பற்றி நாம் கதைகளில் கேட்டிருப்போம். ஏன் நாமே கூட கடலில் சில குப்பிகளில் குறிப்புகளை வைத்து மிதக்க விட்டு வேடிக்கை பார்த்திருப்போம். ஆனால், உண்மையிலேயே கடலில் மிதந்து வந்த ஒரு குப்பியில் ஒரு கடிதத்தை கண்டெடுத்திருக்கிறார்கள் போலந்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள்.
போலந்தின் க்டான்ஸ்க்கில் உள்ள ஸ்டோகி கடற்கரையில் இரண்டாம் உலகப் போர் அரண்களை ஒட்டியுள்ள பகுதியில் எரிக், க்யூபா என்ற இரு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது கடலில் மிதந்து வந்த கடிதக் குப்பியைக் கண்டுபிடித்தனர்.
குப்பிக்குள் 1959ல் ரைஸியா என்ற பெண் கையால் எழுதிய ஒரு கடிதம் இருந்தது. பள்ளிமாணவியான ரைஸியா”பன்னி” என்ற நபருக்கு எழுதிய அந்த கடிதத்தில் ‘டார்னோ என்ற இடத்தில் உள்ள பள்ளியில் தான் தனிமையாக உணர்வதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபரைப் பற்றிய இனிய நினைவுகளிலேயே தான் வாழ்வதாகவும் அதில் எழுதப் பட்டிருந்தது.
“நான் அமைதியாக அடக்கமாக இருக்கிறேன் என்று நான் உனக்கு உறுதி தருகிறேன். எல்லோருடனும் நட்புறவு பாராட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக நான் ஆண்களை முழுமையாக தவிர்த்து விடுகிறேன் “ என்று எழுதியுள்ள ரைஸியா, “அன்பே, நான் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். என் குணம் அது தான். ஆனால், நான் உன்னைப் பற்றியே தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் நம்புவாயா?” என்று காதல் ததும்ப கடிதத்தை முடித்துள்ளார்.
குப்பியைக் கண்டுபிடித்த சிறுவர்கள் இருவரும் டார்னோவிலுள்ள அருங்காட்சியகத்தைத் தொடர்பு கொண்டால் ஒருவெளை கடிதத்தை அனுப்பியவரைக் கண்டுபிடிக்கமுடியும் என்று கூறுகின்றனர்.
 

Trending Articles