கார் லைசென்ஸை பரிசோதிக்க காரை நிறுத்திய காவலர்கள் அதிர்ந்து போய் நின்றார்கள். உள்ளே மெத் என்னும் போதைப்பொருளை வைத்து புகைக்கும் குழலை வாயில் வைத்த படி, ஒரு செல்லப் பிராணி! ரக்கூன்!
அமெரிக்காவின் ஓஹியோ பகுதில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டில் தான் இரு தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அன்று காவலதிகாரி ஆஸ்டின் பிரன்ஹாம் விரைந்து வந்த காரை நிறுத்தி அதை ஓட்டி வந்த 55 வயதான விக்டோரியா விடலிடம் காரின் உரிமத்தை பரிசோதனைக்காகக் கேட்டார்.
காரின் உரிமம் காலாவதியாகி விட்டதால், அது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது தான் காரினுள் அந்த காட்சி அவரை அதிர வைத்தது.
ஓட்டுனரின் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு ரக்கூன் வாயில் மெத் என்னும் போதைப் பொருளை உறிஞ்சும் குழலை வாயில் வைத்தபடி அமர்ந்திருந்தது.
அசாதாரணமான இந்த காட்சியால் திகைத்துப் போன பிரன்ஹாம், கார் முழுவதையும் சோதிக்க வேண்டும் என்றார். விக்டோரியா விடலில் காரை சோதித்த அவர் ஏராளமான மெத்தம்ஃபட்டமின், க்ராக் கொக்கைன், மற்றும் பயன்படுத்தப் பட்ட மூன்று கண்ணாடி மெத் உறிஞ்சுகுழல்களையும் கண்டுபிடித்தார்.
ஸ்ப்ரிங்ஃபீல்ட் டவுன்ஷிப் காவல்துறையின் முகநூல் பதிவொன்றில் இந்த
சம்பவத்தில் போதைப் பொருள் இருப்பைக் கண்டுபிடிக்க உதவிய ரக்கூனின் பெயர் “ச்சூயி” என பொருத்தமாக சூட்டப் பட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
விக்டோரியா விடல் போதைப் பொருள் வைப்புக்காகவும், கார் லைசன்ஸ் காலாவதி ஆனதற்காகவும், குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டார்.
”ச்சூயி” என்ற ரக்கூனுக்கு எந்த உடல்நிலை பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப் பட்டதோடு, அதை செல்லப் பிராணியாக வைத்திருப்பதற்குத் தேவையான உரிமம் விடலிடம் இருக்கிறதா என்றும் சோதிக்கப் பட்டது.
என்ன தான் எதிர்பார்க்கக் கூடாததை எதிர்பார்க்க பயிற்சியும் பழக்கமும் இருந்தாலும், இதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இதுவரை ஒரு செல்லப் பிராணி வாயில் மெத் குழலோடு இருப்பதை ஸ்ப்ரிங்ஃபீல்ட் காவல்துறை பார்த்ததில்லை என்றும் அவர்கள் தரப்பில் கூறப் பட்டது. சட்டமீறல்கள் இப்படித் தான் நடக்கும் என்று கணிப்பது கடினம் மட்டுமல்ல, அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் இந்த நிகழ்வு தெளிவாக்குகிறது.
உரிமையாளரை போட்டுக் கொடுத்த செல்லப் பிராணி !
schedulePublished May 8th 25