மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை 'சந்தாரா' என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்து உயிரிழக்க வைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குழந்தைகள் நல ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
சமண மதத்தை பின்பற்றுவோர், முதுமை, தீராத நோய் அல்லது வாழ விருப்பம் அற்றுப் போகும்போது உண்ணா நோன்பிருப்பது சந்தாரா என்று அழைக்கப்படுகிறது.
சமிபத்தில் இந்தூரை சார்ந்த ஐடி ஊழியர்களான பியூஷ் ஜெயின், வர்ஷா ஜெயின் ஆகியோரின் மூன்றரை வயது குழந்தை வியன்னா ஜெயின் இவ்வாறு இறந்துவிட்ட நிலையில், மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதிபூண்டதற்காக, அச்சிறுமி 'கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்' இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், இந்த மூன்றரை வயது குழந்தை அவருடைய சொந்த விருப்பத்தால் இந்த விரதத்தைக் கடைபிடித்திருக்குமா என்ற கேள்வி பூதாகாரமாகி வருகிறது.
தங்கள் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோதும் அவர் உடல்நிலை சரியாகவில்லை என்றும், சமண மத ஆன்மீக தலைவரின் அறிவுரைப்படி சந்தாரா விரதத்தை எடுக்க வைத்ததாகவும், அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின் கூறியுள்ளார்.
2021 நவம்பர் 20 அன்று பிறந்த குழந்தை வியானாவுக்கு இந்த ஜனவரியில் உடல் சுகவீனம் ஏற்பட்ட போது, அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிய வந்து மும்பையில் அறுவை சிகிட்சை செய்யப் பட்ட பின் அவர் குணமடைந்தார். ஆனால், மீண்டும் மார்ச் 15க்குப் பின் அவர் அதிக சுகவீனமடைந்த போது, மூளையில் புதிய கட்டிகள் வந்திருப்பதாகவும் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிட்சை செய்யமுடியாது என்று மருத்துவர் மருந்துகளை பரிந்துரை செய்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்தார். குழந்தையின் உடல்நிலை மோசமாகி, நீர் கூட அருந்த முடியாத நிலையில் குழந்தைக்கு உணவுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
அந்நிலையில் ஜெயின் துறவி ராஜேஷ் முனி மகாராஜிடம் குழந்தையைக் கொண்டு சென்ற போது அவர், குழந்தையின் முடிவு நெருங்கிவிட்டதால், சந்தாரா விரதத்தை கடைபிடிக்க வைக்க வேண்டுமென்று கூறினார். ”சந்தாரா விரதம் இரவு 9:55க்கு தொடங்கப்பட்டது, என் குழந்தை 10:05க்கு இறந்துவிட்டார்." என்று குழந்தையின் தாயார் கூறினார்.
ஒருவர் உணவை கைவிடுவதன் மூலம் மரணத்தை எதிர்கொள்ளும் சந்தாரா விரதத்தைப் பற்றிய புரிதலோ அலது அதற்கான முதிர்ச்சியோ மிகவும் நோய்வாய்பட்ட ஒரு மூன்று வயது குழந்தைக்கு எப்படி இருக்க முடியும் என்ற சர்ச்சை உண்டாகிய நிலையில் இதை விசாரித்துவரும் மத்திய பிரதேச குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இது தொடர்பாக இந்தோர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.