மாபெரும் டைனோசர் மயானம்!

கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் ஒரு பெரிய டைனோசர் மயானம் உள்ளது. ஒரே நாளில் நடந்த ஏதோ ஒரு துர்ச் சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டைனோசர்கள் இறந்து புதையுண்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள், ”மரண ஆறு” (River of Death) என்று அழைக்கப்படும் பைப்ஸ்டோன் நீரோடை(Five stone creek) அருகில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். டைனோசர்கள் எவ்வாறு இறந்தன என்ற 7.2 கோடி ஆண்டுகால புதிருக்கு அவர்கள் விடை தேடுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் இந்த புதைப் படிமங்களை 'தொன்மத் தங்கம்' (Palaeo Gold) என்று அழைக்கிறார். டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ய முதலில் அதன் மீது இருக்கும் கடினமான பாறைகளை உடைக்க வேண்டும்.
அவருடைய குழு கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருக்கும் மண்ணை, அடுக்கடுக்காக அப்புறப்படுத்த, அந்த டைனோசர்களின் எலும்புகள் மேலே தெரிய ஆரம்பிக்கின்றன.
நீரோடைக் கரையெங்கும் புதைந்திருக்கும் பெரிதும் சிறிதுமான எலும்புகளை தேடி எடுக்கும், டாக்டர் எமிலியின் குழுவினர் எல்லா எலும்புகளையும் தங்களால் இனம் காண இயலவில்லை என்று கூறுகிறார்கள். அது தான் இந்த “நீரோடையில் மறைந்திருக்கும் மர்மம் என்கிறார் எமிலி.
இங்கே இனம் காணப்பட்ட எலும்புகள் அனைத்தும் பேச்சிரினோசரஸ் வகை டைனோசரை சார்ந்தவை. இந்த வகை டைனோசர்கள் கடைசி கிரிடேசியஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன. ஐந்து மீட்டர் நீளமும், 2 டன்கள் எடையும் கொண்ட இவை, தனித்துவமான எலும்பாலான சிறிய தோகை போன்ற அமைப்புகளையும், மூன்று கொம்புகளையும் கொண்டவை. இதன் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டி போன்ற அமைப்பு, 'பாஸ்' என்று அழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமான இந்த ஆய்வுகளில் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் சுமார் 300 எலும்புகள் கண்டுபிடிக்கப் படுகின்றன என்று கூறும் பேராசிரியர் எமிலி, ‘நான்கு கிலோமீட்டர் அளவுக்கு நீண்டுள்ள எலும்புப் படுகையில், ஒரு டென்னிஸ் மைதானம் அளவே ஆய்வு செய்யப் பட்டுள்ளதாகவும், இங்கு கிடைத்த எலும்புகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஆயிரக்கணக்கான டைனோசர்கள் இங்கு வாழ்ந்து ஒரேயடியாக இறந்திருப்பது தெரிய வருகிறது என்றும் கூறினார்.
குளிர்காலத்தில் தென் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த டைனோசர்கள், கோடை காலத்தை கழிப்பதற்காக, பிரமாண்ட அணியாக நூற்றுக்கணக்கான மைல்கள் பயணமாகி வடக்கு நோக்கி வந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இப்போது இருப்பதைவிட, அதிக வெதுவெதுப்புடன் இருந்த இப்பகுதி பசுமையாக இருந்திருக்க வேண்டும். தாவர உண்ணிகளான டைனோசர்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய அளவுக்கு இது பசுமையாக இருந்திருக்க வேண்டும்.

"இது ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் மாபெரும் கூட்டம். தொன்ம ஆராய்ச்சியில் இது போன்ற பதிவு இதற்கு முன்பு கிடைத்ததில்லை" என்று பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் தெரிவிக்கிறார்.
ஆனால், ஒரே நேரத்தில், இந்த பைப்ஸ்டோன் நீரோடையில் அளவுக்கு அதிகமான டைனோசர்கள் உயிரிழந்தது எப்படி?
இதற்கு ஆராய்ச்சியாளர்களிடம் பல ஆதாரங்கள் அடிப்படையிலான யூகங்கள் உள்ளன.
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினாலோ, அல்லது மலையின் மேலே ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாகவோ இந்த இனப் பேரழிவு நடந்திருக்கலாம். தடுத்து நிறுத்த இயலாத நீர்ப்பெருக்கு, அடித்துவரப்பட்ட மரங்கள், பாறைகள் இவை அனைத்தும் ஒன்றாக இந்த உருவத்தில் மிகப் பெரிய இந்த விலங்கினத்தின் மறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை இங்கு ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்த பல ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


 

Trending Articles