வயல்வெளியாகும் வறண்ட பாலை ஒரு மனமாற்றம் செய்த மாயம்!

வயல்வெளியாகும் வறண்ட பாலை- ஒரு மனமாற்றம் செய்த மாயம்!


மனம் மாறிய ரௌடி ஒருவர் பாலைவனத்தை சோலைவனமாக்கிக் கொண்டிருக்கும் அதிசயம், கென்யாவின் நைரோபியில் நடந்து கொண்டிருக்கிறது.
ஜோஸஃப் கரியாகாவும் அவர் நண்பர்களும் நைரோபியில் உள்ள மதரே சேரியில் வழிப்பறி, ஆள்கடத்தல், காவல்துறையுடன் மோதல் என்று வாழ்ந்தவர்கள் தான். ஆனால், கரியாகாவின் சகோதரன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட போது, இந்த கும்பலுக்கு வாழ்க்கை கேள்விக் குறியானது.
” இப்படி வாழ்ந்தா வீணா அத இழந்துடுவோம்” னு எங்களுக்குப் புரிஞ்சுது” என்கிறார் 27 வயதான கரியாகா.
இப்போது அந்த ரௌடிகள், சமூக பணித்திட்டத்துடன் உழைக்கும் விவசாயிகள். 2017ல் சுமார் 10 பேர் இணைந்து ”விஷன் பேரரஸ்” என்ற பெயரில் உருவாக்கிய இயக்கம், வறுமையை ஒழிக்கவும், இளைஞர்களை தீமைகளிலிருந்து மீட்கவும் உறுதி பூண்டது.
சவால்களைக் கடந்து, விஷன் பேரர்ஸ் இன்று 150க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது உள்பட எளிமையான அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
நைரோபியில் நெரிசல் மிக்க மண்சாலைகளும், தகர வீடுகளும் நிறைந்த மதரே பகுதியில் விஷன் பேரர்ஸின் நவீன விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இங்கு 60% மக்கள் தற்காலிக வீடுகளில் தான் வசிப்பதாக சி எஃப்கே ஆஃப்ரிக்கா என்னும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது. .
”…சரியான கட்டமைப்பு இல்லாத நிலையில் பெருகி வரும் இந்த சமுதாயங்கள் பெரிய பிரச்சினையை சந்திக்கின்றன. வறுமை..! வறுமை, இளைஞர்களை சுலபமாக குற்றங்களில் தள்ளி விடுகிறது”. என்கிறார், இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெஃப்ரி ஒகோரோ.
”மதரே போன்ற சேரிப் பகுதிகளில் வாழ்பவர்கள் குழந்தைகளுக்கு சாப்பாடோ, படிப்போ கொடுக்க முடியாத வறுமையில் இருக்கிறார்கள். சட்டவிரோத செயல்களில் சுலபமாக பணம் கிடைப்பதால், இங்குள்ள இளைஞர்கள் கூட்டமாக அப்படிப்பட்ட வேலைகளில் இறங்குகிறார்கள்.” என்றும் கூறினார்.
இது விஷன் பேரார்ஸ் விவசாயிகளுக்கு தெரியாதது அல்ல.
கரியாகாவின் சகோதரனின் மரணத்திற்குப் பின், கரியாகாவும் மற்ற இளைஞர்களும் வாழ்க்கையை சரியாக வாழ தீர்மானித்த பிறகு,
முதலில் சேரிப்பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி, பக்கத்து ஊர்களிலிருந்து காய்கறியும், பொருட்களும் வாங்கி சிறிய இலாபத்திற்கு விற்கிறார்கள். அப்போது தான் தங்கள் பகுதியில் காய்கறி சரியாக கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து அதிகாரிகளிடம் அனுமதி பெற்று குப்பைகளை அகற்றி காய்கறிகளைப் பயிரிடுகின்றனர்.
மண் வளமின்மையும், தண்ணீர் பற்றாகுறையும், மனம் தளர வைக்கிறது. ஆனால், வேறொரு பகுதியில் நடக்கும் நவீன விவசாய முறைகளைப் பற்றி கேள்விப் படுகிறது இந்த குழு. க்ரோத்4சேஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பொருட்களை வாங்கி, நவீன விவசாய முறைகளையும் கற்றுக் கொள்கிறது.
இன்று விஷன் பேரர்ஸ் காய்கறிகள் விளைவித்து, பன்றி வளர்த்து, சிறிய குளங்களில் மீன்களை வளர்த்து தேவைக்கு மிஞ்சியதை விற்று பணமாக்குகிறது. கார் கழுவும் நிலையமும்,பொது கழிப்பறை ஒன்றும் இவர்களால் இயக்கப் படுகிறது. இதில் வரும் வருமானத்தில் தான் 150 குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் பணியும் நடக்கிறது.
போதைப் பொருள், சட்ட விரோத செயல்களைப் பற்றிய எச்சரிப்பு நிகழ்ச்சிகளையும், பெண்களுக்கும், உடல்நலம் குறித்த நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது, இந்த குழு.
இதில் சவால்கள் இல்லாமல் இல்லை. விஷன் பேரர்ஸில் இணைய வேண்டுமானால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது. ஆனால் சில சமயங்களில் யாராவது ஒரு உறுப்பினர் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வதுண்டு. குற்றப் பின்னணி இருப்பதால், காவல் துறையின் குறுக்கீடும் , இடைஞ்சல்களும் அவ்வப்போது இருக்கும். சனிக்கிழமைகளில் உணவு வாங்க பணமில்லாமல் போவது வாராந்திர போராட்டம்.
அவர்கள் வாழும் பகுதிகளின் தேவைகள் அவர்களுக்கு நன்றாகத் தெரிவதால், ”அந்த இடங்களின் முன்னேற்றத்தின் எதிர்காலமே இவர்கள் தான்” என்கிறார் சிஎஃப்கே ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த ஒகோரோ.
சகோதரனை இழந்த வலி இன்னும் மறையவில்லை என்றாலும், தனது பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறார் கரியாகா.
“ விவசாயம் நிச்சயமாக உலகத்தை மாற்றிவிடும்” என்று பளீரென நம்பிக்கை மின்ன சிரிக்கிறார், ஜோஸஃப் கரியாகா.


 

Trending Articles