கட்டிலுக்கடியில் பூதம் இருப்பதாக நீங்கள் பயப்படுகிறவரா? அல்லது உங்கள் குழந்தைகள் பயப்படுகிறார்களா? ஒரு முறை துணிந்து கீழே பார்த்து விடுங்கள். ஒருவேளை பூதம் இருந்தாலும் இருக்கலாம்.
அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் அப்படி ஒரு குழந்தை பயந்த படியே நடந்தது.
கான்சாஸ் மாகாணத்தில் கிரேட் பென்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஒரு பணிப்பெண், அவர்களை படுக்கைக்கு தயார் செய்யும் போது ஒரு குழந்தை தன் படுக்கையின் கீழ் பூதம் இருப்பதாக சொல்லி அழ ஆரம்பித்தது. குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக “கட்டிலின் கீழ் எதுவுமே இல்லையே” என்று சொன்னபடியே குனிந்து பார்த்த அந்த பெண் அப்படியே உறைந்து விட்டார்.
குனிந்து பார்த்த அவர் முகத்திற்கெதிரே திருதிருவென விழித்த படி ஒரு ஆணின் முகம். ”பூதத்”திற்கும் பணிப்பெண்ணுக்கும் இடையே நடந்த இழுபறியில் குழந்தை கீழே விழுந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
பணிபெண்ணை தள்ளிவிட்டு, இந்த நபர் காவல்துறையினர் வரும் முன், அந்த வீட்டிலிருந்து தப்பியோடியதாகவும், ஆனால், அந்த பகுதியிலேயே சுற்றித் திரிந்ததாகவும், பின்னர் மறுநாள் காலை காவல்துறையினரால் கைது செய்யப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது.
பூதம் போல வந்து கட்டிலுக்கடியில் ஒளித்திருந்த நபர் யார்? அவர் "முன்னர் அந்த வீட்டில் வசித்ததாகவும், இப்போது அவர் அங்கே வருவதற்கு குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
சென்ற ஜனவரி, ஃபெப்ரவரி மாதங்களிலும் கூட இவர் மீது அச்சுறுத்தல், விலக்கப் பட்ட இடத்தில் அத்துமீறி நுழைதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாகத் தெரிகிறது.
இப்போது கடத்தல் முயற்சி, கொள்ளை முயற்சி, குழந்தைக்கு ஆபத்து விளைவித்தல், காவல்த்துறையினரை தாக்குதல், நீதிமன்ற அவமதிப்பு என பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இந்த நபர் 5இலட்சம் டாலர் அபராதத்துடன் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.
பயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். சில நேரங்களில் அவை உயிர்காக்கும் கணிப்புகளாகக் கூட இருக்கலாம்.