கென்யாவில் எறும்புகளைக் கடத்திய நான்கு பேருக்கு 7700 டாலர் அபராதம்!

கென்யாவில் எறும்புகளைக் கடத்திய நான்கு பேருக்கு 7700 டாலர் அபராதம்!

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுஷனையே கடிச்சுட்டான்” என்று ஒரு பழமொழியைக் கேட்டிருப்போம். தந்தத்திற்காக யானைகளையும், தோலுக்காக காண்டாமிருகங்களையும் முதலைகளையும் திருடிய சர்வதேச திருடர்கள், இப்போது தோட்டத்து எறும்புகளையும் விட்டு வைக்கவில்லை என்பது வியப்பளிக்கிறது..
ஆப்பிரிக்காவின் கென்யாவில் ஒரு நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகளை கடத்த முற்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கொண்டு வரப் பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு தலா 7700 டாலர் அபராதம் விதித்து நீதி வழங்கினார்.
ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர் எறும்புகள் என்று அழைக்கப்படும் எறும்புகளின் ராணி எறும்புகள் கடத்தப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்கின்றனர் கென்ய வனஉயிர் சேவை அதிகாரிகள்.
கென்யா வனஉயிர் சேவையினர் (KWS) கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயிரக்கணக்கான ராணி எறும்புகள், 2 மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் வகையில் 'டெஸ்ட் ட்யூப்களில்' அடைக்கப்பட்டிருந்தன.
கடத்தப் பட்ட எறும்புகளில் 5000 எறும்புகள் ரூ 6.5 லட்சம் வரை விலை போகலாம் என்று தெரிவித்த அதிகாரிகள், இது கென்யாவில் நடந்த மிகப்பெரிய உயிரி-கடத்தல் என்கின்றனர்.
மிகப்பெரிய உயிர்களை மட்டுமே இதுவரை பாதுகாத்த 'KWS' அரிய வகை பூச்சியினங்களை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்கிறது.
கடத்தப் பட்ட எறும்புகளை செல்லப் பிராணிகளாக, செயற்கை புற்றுகளில் வளர்ப்பதற்காக, நல்ல விலைக்கு வாங்க விலங்குப் பிரியர்கள் காத்திருக்கிறார்களாம். அதற்காக தான் இந்த உயிரியல் திருட்டு!

Trending Articles