பூமி பூஜை முதல் தலைவாசல் வரை: ஆடி மாதமும் வாஸ்துவும் குறித்த பலருக்கும் தெரியாத அரிய உண்மைகள்!

சென்னை: ஆடி மாதம் என்றாலே பலருக்கும் மனதில் எழும் முதல் கேள்வி, "இந்த மாதத்தில் புது வீடு குடிபோகலாமா? பால் காய்ச்சலாமா?" என்பதுதான். காலம் காலமாகப் புழக்கத்தில் உள்ள இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் வாஸ்து மற்றும் ஆன்மீகக் காரணங்கள் என்ன? ஆடி மாதத்தில் வீடு கட்ட பூமி பூஜை செய்யலாமா? போன்ற பல கேள்விகளுக்கு, பிரபல வாஸ்து நிபுணர் எம்.எஸ். ராமலிங்கம் ஐயா அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வியப்பூட்டும் தகவல்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆடி மாதமும் தட்சிணாயனமும்: "வாஸ்துவுக்கும் அனைத்து மாதங்களுக்கும் சம்பந்தம் உண்டு," என்று ஆரம்பித்தார் எம்.எஸ். ராமலிங்கம் ஐயா. ஜோதிட சாஸ்திரத்தில் உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் என்று இரண்டு காலங்கள் உண்டு. உத்தராயண மாதங்கள் (தை முதல் ஆனி வரை) சுப காரியங்களுக்கு உகந்தவை. தட்சிணாயன கால மாதங்களில் (ஆடி முதல் மார்கழி வரை) தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே சுப காரியங்கள் செய்யலாம். இந்த தட்சிணாயனத்தின் தொடக்க மாதமான ஆடி மாதத்தில், புதிய வீடு குடி போவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே 'ஆடி மாதம் குடி போகக்கூடாது' என்ற விதி உருவானதாக அவர் விளக்கினார்.

பெண்களின் ஆன்மீக மாதமான ஆடி: இந்த விதி உருவானதற்குப் பின்னால் ஒரு சமூகக் காரணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஆடி மாதம் என்பது பெண்கள் பயபக்தியாக அம்மன் வழிபாட்டில் ஈடுபடும் மாதம். கூழ் வார்த்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல விசேஷங்களில் பெண்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பார்கள். ஒரு பெண் வீட்டை மாற்றுவதில் முக்கியப் பங்களிப்பவர் என்பதால், ஆடி மாதத்தில் அவர்களை ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கும் வகையில், வீடு மாறும் சிரமத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் 'ஆவணி மாதம் போகலாம்' என்று கூறப்பட்டது" என்றார் ஐயா.

ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பும் அறிவியல் பின்னணியும்: "ஆடியில் குழந்தை பிறந்தால் நல்லதல்ல" என்ற ஒரு கருத்தும் பரவலாக உண்டு. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமே உள்ளது. ஆடி மாதத்தில் தம்பதிகள் இணைந்தால், பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த நாட்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக் கருதியே இந்த வழக்கம் உருவானது. அந்தக் காலத்தில் ஏ.சி., மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததால், நோய் நொடிகள் வராமல் தடுக்கவே நம் முன்னோர்கள் இத்தகைய விதிகளை வகுத்தனர்.

ஆடி மாதத்தில் வாஸ்து நாள் - பலருக்கும் தெரியாத உண்மை! பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய வாஸ்து ரகசியத்தை எம்.எஸ். ராமலிங்கம் ஐயா வெளியிட்டார். "ஒவ்வொரு ஆடி மாதத்திலும் வாஸ்து தேதி உண்டு! நீங்கள் புது வீடு கட்ட நினைத்தால், ஆடி மாதத்தில் வரும் வாஸ்து நாளில் தாராளமாக பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பிக்கலாம். குடி போவதுதான் தவறே தவிர, பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பிப்பது மிகவும் சிறந்தது," என்றார். இந்த ஆடி மாதத்தில், ஆடி 11ஆம் தேதி (அதாவது ஜூலை 28, 2025) வாஸ்து நாள் வருவதாகவும், அந்த நாளில் தாராளமாக பூமி பூஜை செய்யலாம் என்றும் குறிப்பிட்டார். வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும் என்றும், ஆடி மாதம் அந்த எட்டு வாஸ்து நாட்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

தலைவாசல், நிலை மற்றும் புகைப்படங்கள்: வீட்டின் தலைவாசல் ஒரு மனிதனின் முகத்திற்கு சமம். வாசல் வடகிழக்கில், கிழக்கு பார்த்தபடி அமைந்திருந்தால், அந்த வீட்டில் தரித்திரம் இருந்தாலும் தீர்ந்து போய் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டிற்கு நிலைக் கதவு வைப்பதற்கு ஆடி மாதம் உகந்ததல்ல. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி போன்ற ஸ்திர மாதங்களே நிலைக் கதவு வைக்க ஏற்றவை.

மேலும், வீட்டு வாசலுக்கு மேலே ஆணி அடித்து சாமி படங்களையோ, இறந்தவர்களின் படங்களையோ மாற்றுவது தவறு. மரத்தால் செதுக்கப்பட்ட பிம்பங்கள் கதவில் இருக்கலாம். ஆஞ்சநேயர் படம் பயம் இருப்பவர்கள் மாட்டலாம். ஆனால், வீட்டு வாசலில் தெய்வப் படங்களை வாட்ச்மேன் போல மாற்றுவது மகா அபத்தம். முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டுக்குள், வடக்கு திசையை நோக்கிய சுவற்றில் மாற்றுவது எந்தவித தோஷத்தையும் ஏற்படுத்தாது என்றும், அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

லட்சுமி கடாட்சம் பெற வாஸ்து டிப்ஸ்: வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக இருக்க, வாஸ்துப்படி வீடு கட்டுவதே முதல் படி. வடகிழக்கு திசையில் கிழக்கு பார்த்த வாசல் வைத்தால் மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்பதற்குச் சமம். அதேபோல், வீட்டின் தென்மேற்கு திசையில் கழிவறை அமைப்பதோ, பள்ளம் இருப்பதோ, பால்கனி அமைப்பதோ கூடாது. இது மகாலட்சுமியின் சகோதரியை (மூதேவி) வீட்டிற்குள் அழைப்பதாகும்.

நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் அறிவியல் மற்றும் வாழ்வியல் ரீதியான காரணங்கள் உண்டு. அவற்றை அறிந்து சரியான முறையில் பின்பற்றினால், நிச்சயம் நிம்மதியான வாழ்வைப் பெறலாம் என்று வாஸ்து நிபுணர் எம்.எஸ். ராமலிங்கம் ஐயா அவர்கள் வலியுறுத்தினார்.Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles