சென்னை: அன்னை ஆதிபராசக்தியின் அருளாலும், விநாயகரின் கருணையாலும், வரவிருக்கும் காலகட்டத்தில் நமது தாய் திருநாடான இந்தியாவுக்கு ஒரு மிக முக்கியமான மாற்றம் நிகழ உள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செவ்வாய் திசை வரவிருக்கிறது. தற்பொழுது சனீஸ்வரர் வக்கிரம் அடைந்திருப்பதாலும், அக்டோபர் 18-க்கு பிறகு குருவும் வக்கிர நிலை அடைவதாலும், இத்தகைய காலகட்டங்களில் நமக்கு ஒரு பேரருள் துணை தேவைப்படுகிறது. இதுகுறித்து பிரபல ஜோதிடர் பவானி ஆனந்த் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
செவ்வாய் திசையின் தாக்கம் மற்றும் இந்தியாவின் ஜாதகம்: உலகிற்கே ஞான குருவாக விளங்கக்கூடிய நமது தாய் திருநாடான இந்தியாவின் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய சில மாற்றங்கள் உலகெங்கிலும் பிரதிபலிக்கும் சூழலை ஏற்படுத்தும். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு வரவிருக்கும் செவ்வாய் திசை, இந்தியாவின் மிதுன ராசியில் 19 அஷ்டகவர்க்க புள்ளிகளுடன் வலுவாக அமைகிறது. செவ்வாய் என்றால் யுத்தம், நெருப்பு, வாகன விபத்துகள், ரத்தம், நிலம், அண்ணன் மற்றும் சிவப்பு நிறத்தைக் குறிக்கும். எனவே, இந்த ஏழு ஆண்டுகள் அதிக பிரார்த்தனைகள் தேவைப்படுகிறது. குறிப்பாக, செவ்வாய்க்கு அதிதேவதையான முருகப்பெருமானின் வழிபாடு மிக அவசியம் என பவானி ஆனந்த் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் முருகன்: மூலாதார சக்கரத்தின் ஆதாரம்! முருகப்பெருமான் ஆறுபடை வீடுகளில் வீற்றிருந்து, ஆறுதலையும் நல்மாற்றங்களையும் அருள்பவர். உடலிலுள்ள ஆறு சக்கரங்களில், மூலாதார சக்கரம் (அடித்தளம்) திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமானைக் குறிக்கிறது. உடல் இயங்க மூலாதாரச் சக்கரம் எப்படி முக்கியமோ, அதேபோல நமது நாட்டின் ஆன்மீக அடிப்படையாகவும் திருப்பரங்குன்றம் முருகன் விளங்குகிறார்.
நக்கீரர் பெருமான் சிவ அபராதம் செய்து, பிரேத பாதா தோஷத்தால் பீடிக்கப்பட்டபோது, திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வேண்டி திருமுருகாற்றுப்படை பாடி மீண்ட கதையை பவானி ஆனந்த் விளக்கினார். இது, கைலையில் தவறு செய்தாலும், திருப்பரங்குன்றம் முருகனிடம் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிப்பதாகும். மறைமுகத் தடைகள், காத்து-கருப்பு சேட்டைகள், வாழ்க்கைப் பிரச்சனைகள் போன்ற பிரேத பாதா தோஷங்களிலிருந்தும் திருப்பரங்குன்றம் முருகன் மீட்கும் சக்தி கொண்டவர் என்றார் அவர்.
ஆறு சக்கர தேவதைகளும் முருகன் வழிபாடும்: உடலிலுள்ள ஆறு சக்தி சக்கரங்களான மூலாதாரம் (டாமினி), சுவாதிஷ்டானம் (ராகினி), மணிபூரகம் (லாக்கினி), அனாகதம் (காக்கினி), விசுத்தி (சாக்கினி), ஆக்ஞை (ஹாக்கினி) ஆகியவற்றுக்குரிய தேவதைகள் அனுதினமும் திருப்பரங்குன்றத்து முருகனை வழிபடுகின்றனர். இந்த சக்கரங்களுக்குரிய பீஜாட்சர ஒலிகள் 'லம், வம், ரம், யம், ஹம், ஓம்' ஆகியவை அங்கிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 18 சித்தர்களும், நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், அகத்தியர் போன்ற மெய்யன்பர்களும் அனுதினமும் வழிபட்டு வரம் பெறும் திருத்தலம் திருப்பரங்குன்றம்.
மேலும், முருகப்பெருமான் தனது வேலால் உருவாக்கிய தீர்த்தமும் அங்கே உள்ளது. முருகனின் திருமணக் கோலத்தைக் காணும் திருத்தலமும் இதுவே.
செவ்வாய் திசையில் முருகனை வணங்குவதன் பலன்கள்: வரவிருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு, முருகப்பெருமானுக்கு அதிக பிரார்த்தனைகள் தேவை. அனுதினமும் 'முருகா' என்று அழைக்க வேண்டும். அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்து முருகனைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கேட்பது மிகவும் உகந்தது. இயன்றால் மதுரை திருப்பரங்குன்றம் சென்று மனதார முருகனை வேண்டி வணங்குங்கள்.
"நாம் ஒரு வாகனத்தில் பயணிக்கிறோம் என்றால், அந்த வாகனத்தின் ஜாதகம் தான் பயணிகளுக்குப் பேசும். வாகனம் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். இந்த சரீரம் கூட ஒரு வாகனம்தான். அப்போ நமது தேசத்துக்கான செவ்வாய் திசை, இங்கே இருக்கும் நம் அனைவருக்கும் நலம் பயக்க வேண்டுமென்றால் முருகனை வழிபட வேண்டும்," என்று பவானி ஆனந்த் விளக்கினார்.
அமைதி, செல்வம் மற்றும் ஆன்மீகத் தேடலில் வெற்றி பெற, திருப்பரங்குன்றம் முருகனை மனமுருக வேண்டி, வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் அந்தப் பரம்பொருளை வணங்குங்கள். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு உலகெங்கும் முருகனின் அருள் தேவை; நாம் அனைவரும் ஒன்றுகூடி பிரார்த்திப்போம்.