ஆடிப் பெருக்கு 2025: மாங்கல்ய பலம் கூட்டும் உன்னத நாள்! புதுமணத் தம்பதிகளுக்கான சிறப்பு நேரங்கள்!
சென்னை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி, ஆன்மீகம் மற்றும் விவசாயத்திற்கு ஒருசேர முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப, இம்மாத்தில்தான் விவசாயப் பணிகள் கோலாகலமாகத் தொடங்கும். ஆன்மீக ரீதியாக, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் எனப் பல்வேறு சிறப்பான நாட்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். அந்த வரிசையில், நதி தேவதைகளை வழிபடும் ஆடிப் பெருக்கு நன்னாள் நாளை (ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஆடிப் பெருக்கு: நதிகளின் திருவிழா!
ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், நதிகள் பெருகி வருவதைக் கொண்டாடும் ஆடிப் பெருக்கு திருவிழா, ஆடி 18 என்றும் அழைக்கப்படுகிறது. இத்தினத்தில், காவிரிக் கரையோரங்கள், நீர்நிலைகள், ஆறுகள் எனப் பல இடங்களிலும் மக்கள் கூடி வழிபாடு செய்வார்கள். ஓடும் நதி நீரில் தங்கள் கஷ்டங்களும், துயரங்களும் கரைந்து ஓடிவிடும் என்பது ஐதீகம். மேலும், ஆடிப் பெருக்கன்று தொடங்கும் எந்தவொரு காரியமும் நிச்சயம் துலங்கும் என்பது நம்பிக்கை.
மாங்கல்யப் பலம் கூட்டும் சடங்கு:
ஆடிப் பெருக்கு நாள், புதிதாகத் திருமணம் ஆன தம்பதியருக்கு மிகவும் விசேஷமானது. இந்நாளில், புதுமணத் தம்பதிகள் தங்கள் மாங்கல்யச் சரடைப் பிரித்து, புதிய மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை கோர்த்து அணிவது வழக்கம். இவ்வாறு செய்வதால், தம்பதியரின் வாழ்வு நிலைத்து நீடிக்கும் என்றும், கணவரின் ஆயுள் பலம் கூடி, மாங்கல்ய பாக்கியம் செழிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்: இந்த வருடத்தின் ஆடிப் பெருக்கு அன்று (ஆகஸ்ட் 3, 2025), மாங்கல்யத்தை மாற்றிக்கொள்ள உகந்த நேரங்களாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்பிடுபவை:
காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை
காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை
இந்த நேரங்களில் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து, அம்பிகையின் அருளைப் பெறலாம்.
வீட்டில் வழிபாடு செய்யும் முறை:
நதி அல்லது கோவில் குளங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
முதலில் வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
வீட்டிலேயே தண்ணீர் குழாய் அல்லது கிணற்றின் அருகில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற இனிப்புப் பண்டங்களை நிவேத்தியமாகப் படைத்து, ஒரு கல்யாண விருந்து போலவே கொண்டாடலாம்.
கணவரின் கையில் புதிய மஞ்சள் கயிறு கட்டி, தங்கள் இல்லற வாழ்வு நிலைத்து நீடிக்க வேண்டும் என இருவரும் வேண்டிக்கொள்ளலாம். அதன் பிறகு மனைவி தன் கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளலாம்.
திருமண வரம் வேண்டுவோருக்கான வழிபாடு: திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த ஆடிப் பெருக்கன்று வழிபாடு செய்து, பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது விரைவில் நல்ல வாழ்க்கைத் துணை அமைய உதவும். கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை ஓடும் நீரில் விடுவது வழக்கமாகும்.
ஆடிப் பெருக்கு அன்று மேற்கொள்ளும் இந்த வழிபாடுகள், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், செழிப்புக்கும் வழிவகுக்கும். நாளை கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கன்று, அனைவரும் நதிகளைப் போற்றி வழிபட்டு, அம்பிகையின் அருளால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்றிட இன்டியாக்ளிட்ஸ் குழுமம் வாழ்த்துகிறது.