சென்னை: கடன் தொல்லை, கவலைகள், தடைகள் என வாழ்வின் பல பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, முருகப்பெருமானை வழிபடுவதுதான் என்று ஆன்மீக பேச்சாளர் திரு. விஜயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், முருகனின் அருளை பெறுவது எப்படி, அடியார்கள் பின்பற்ற வேண்டிய நியமங்கள், மற்றும் ஆறுபடைவீடு தலயாத்திரையை எப்படி முறையாக மேற்கொள்வது என்பது குறித்து விரிவாகப் பேசினார்.
முருகனின் அருள் ஒரு பெரிய கதவு! சந்தேகங்கள் கொண்ட பலரும், 'நான் முருகனை நினைக்கிறேன், ஆனால் முருகன் என்னை நினைக்கிறாரா?' என கேட்பதுண்டு. இதற்குப் பதிலளித்த விஜயகுமார், "உங்களுடைய நாவில் திருப்புகழ், கந்தரலங்காரம், சஷ்டி கவசம் என முருகனின் திருநாமம் வந்தாலே, அது முருகனே உங்களை நினைத்ததால் தான்" என்று கூறினார். முருகனின் அருள் ஒரு பெரிய கதவு போல இருந்தாலும், அதன் பாதத்திலிருக்கும் ஒரு சங்கிலியைப் பிடித்தால் போதும், அது தானாகவே திறக்கும். அந்தச் சங்கிலி, அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகள் போன்ற அடியார்கள் பின்பற்றிய பக்தி மார்க்கம் தான் என விளக்கினார்.
கனவில் முருகன் தரும் அறிகுறிகள்: ஒருவர் ஆறுபடை வீடு யாத்திரையைத் தொடங்குவதற்கு முன், கனவில் முருகனின் உத்தரவு பெறுவது எப்படி என்பதையும் அவர் விளக்கினார். கனவில் வேல், மயில், சேவல் போன்ற முருகனின் திருச்சின்னங்களோ, அல்லது கடல், சிவலிங்கம், மரம் போன்ற இடங்களில் முருகன் இருப்பது போன்ற காட்சிகள் வந்தால், அது யாத்திரையைத் தொடங்குவதற்கான அறிகுறி என்று தெரிவித்தார்.
யாத்திரைக்கான கடுமையான நியமங்கள்: கோயில் பயணத்தை ஒரு 'சுற்றுலா'வாக இல்லாமல், 'யாத்திரையாக' மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், யாத்திரையின் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான நியமங்களையும் பட்டியலிட்டார். அசைவ உணவுகளைத் தவிர்ப்பது, எளிமையான உணவுகளை உண்பது, தினசரி இருவேளை வழிபாடு செய்வது, கந்த புராணம் பாராயணம் செய்வது, மற்றும் கோயிலில் யாசகர்களுக்கும், அடியார்களுக்கு உணவளிப்பது போன்றவை இந்த நியமங்களில் முக்கியமானவை எனத் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும் முன், குறைந்தது 3 முதல் 15 நாட்கள் வரை விரதம் இருந்து செல்வது அவசியம் என்றும், யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இந்த விரிவான பேட்டியை முழுமையாகக் காண, கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.