திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க தரிசனம்!

undefined

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 14) கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க, புனித நீரைத் தலையில் தெளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூ. 2.44 கோடி மதிப்பில் திருப்பணிகள்: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோயில் ராஜகோபுரம், விமான கோபுரங்கள், உபசன்னதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ. 2 கோடியே 44 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜகோபுரத்தின் மேல் ஏழு தங்க கலசங்கள், அம்பாள் சன்னதியில் ஒரு தங்க கலசம் மற்றும் கணபதி கோயிலில் ஒரு கலசம் என மொத்தம் ஒன்பது தங்க கலசங்கள் புதிதாக நிறுவப்பட்டன.

பக்திக் கடல்: கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தொடங்கின. 75 யாக குண்டங்கள் அமைத்து, 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் திருப்பரங்குன்றம் வந்தனர். அவர்களுக்கு 16 கால் மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு தொடங்கி, காலை 5.31 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ட்ரோன்கள் மூலம் புனிதநீர் தெளிப்பு: கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு புனிதநீர் தெளிப்பதற்காக, 10 ட்ரோன்கள் மூலம் கோபுரத்திலிருந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் "அரோகரா" கோஷம் முழங்கி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

தமிழக அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் சங்கர் குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Trending Articles