2022 ல், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை பொது மேடை ஒன்றில் தாக்கி, உடல் முழுக்க பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்தி அவரின் கண்களை பார்வையிழக்கச் செய்த ஹைடி மட்டர் என்ற நபருக்கு இன்று அளிக்கப் பட்ட தீர்ப்பில் 25 வருடம் சிறைத் தண்டனை அளிக்கப் பட்டது.
80களின் இறுதிகளில் மிக பிரபலமாகப் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று சல்மான் ருஷ்டி. இவரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். “சாத்தானின் வேதம்” (Satanic verses-1988) என்ற இவரது நான்காவது புத்தகம் உலகளாவிய வகையில் இஸ்லாமிய மக்களுக்கிடைய பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, அப்போதைய ஈரான் அதிபர் கொமேனி, இவர் தலைக்கு பெரிய விலை ஒன்றும் நிர்ணயித்தார். புகலிடம் தேடி அமெரிக்கா சென்ற ருஷ்டி, எழுதுவதை நிறுத்தவில்லை. அவரது இலக்கியப் பணி மிகவும் குறிப்பிடத் தக்கது.
இந்தியாவில் ஜம்முகாஷ்மீரில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் மூன்று சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்த அஹ்மத் சல்மான் ருஷ்டியின் இலக்கியப் படைப்புகள் புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை சர்வ தேச அளவில் பெற்றிருந்தாலும், அவர் தமது முரண்பாடான கருத்துகளால் சில இஸ்லாமியக் குழுக்களின் விரோதத்தை சம்பாதித்தார்.
குறிப்பாக முன்னர் குறிப்பிட்ட “சாத்தானின் வேதம் (1988) அவர் தலைக்கு உலை வைத்ததோடு, 20 நாடுகளிலும் தடை செய்யப் பட்டது. எண்ணற்ற கொலைகளையும், குண்டு வீச்சுகளையும் நடத்திய தீவிரவாதிகள் நாச வேலைகளுக்கு தங்களைத் தூண்டியது இந்த புத்தகம் தான் என்றனர். ருஷ்டியின் தலைக்கு 3.3 மில்லியன் டாலர் வரை பரிசு வழங்குவதாக அறிவிக்கப் பட்டது . மறைந்தே வாழ்ந்தார் ருஷ்டி. 1998 ல் முன்னாள் ஈரானிய அதிபர் முகமது கடாமி ”இனி அந்த அறிவிப்பு செல்லாது” என்று அறிவித்தாலும் கூட, அது முழுமையாக நீக்கப் படவில்லை. இதற்கு முன்னரும் ஒரு புத்தகம் நிறைய வெடி மருந்துடன் ருஷ்டி இருந்த விடுதிக்கு வந்த முஸ்தஃபா முகமது என்பவர், வெடி குறித்த நேரத்திற்கு முன்னரே வெடித்ததில் உயிரிழந் தார். இவரது புத்தகங்களை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் களும் குறி வைத்து தாக்கப்பட்டனர். ஓரிருவர் அதில் மரணமும் அடைந்தனர்.
இது நடந்து சுமார் 33 வருடங்களுக்குப் பிறகு, இந்த சம்பவங்கள் எல்லாம் கடந்த காலமாகிப் போன பிறகு, 2022 ஆம் ஆண்டு, சல்மான் ருஷ்டி நியூயார்க்கின் சட்டாக்குவாவில் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, ஹைடி மட்டர் என்னும் 27 வயது இளைஞர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் ருஷ்டி படுகாயமடைந்தார். ஒரு கண்ணில் பார்வை பறி போனது. ஈரலும் ஒரு கையும் சேதமடைந்தன. 17 நாட்கள் பென்ஸில்வேனியா மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற ருஷ்டி மூன்று வாரங்களுக்கும் மேல் ரீஹேபிலிட்டேஷன் செண்டரில் தங்க வேண்டி இருந்தது. அந்த காலத்திலும் இந்த தாக்குதல் சம்பவத்தை “கத்தி (2024) என்ற புதினமாக எழுதினார்.
அவரைத் தாக்கியதற்காக தண்டனைப் பெற்றுள்ள ஹைடி மட்டர் “ருஷ்டி மற்றவர்களை மிகவும் தரக் குறைவாக நடத்துகிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை” என்றார். அமெரிக்க குடிமகனான மட்டர், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் பிறப்பிக்கப் பட்ட ”ஃபத்வா” (இஸ்லாமிய ஆணை) வை நிறைவேற்றுவதற்காக, நியூ ஜெர்ஸி யிலிருந்து 112 கிலோமிட்டர் பயணம் செய்து வந்திருப்பதால் அது திட்டமிட்ட சதி என்று தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இவர் மீது தீவிரவாதம் தொடர்பான குற்றங்களும் சாட்டப் பட்டுள்ளன. ருஷ்டியைக் கொல்ல முயன்றதற்காக 25 வருடங்களும், அவருடன் இருந்தவரை குத்தி காயப்படுத்தியதற்காக 7 வருடங்களு மாக மட்டருக்கு 32 வருடங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.