உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பல நூறு கோடி மக்களின் கனவு தேசம் அமெரிக்கா. உலகில் அதிகப்படியான மக்கள் குடியேற விரும்பும் நாடான அமெரிக்காவை விடுத்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் விரும்புவதாக அதிர்ச்சிதரும் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிபர் டிரம்பின் கெடுபிடிகள் மற்றும் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றே பலரும் அமெரிக்காவை விட்டு வெளியேற விரும்புவதாக குடியேற்ற முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவை விட்டு வெளியேற விரும்புபவர்கள் பெரும்பாலும் அயர்லாந்து, பிரிட்டன், ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து அயர்லாந்து நாட்டில் குடியேற விரும்புவோர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் முந்தைய கோரிக்கைகளைவிட அறுபது சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அயர்லாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இதே போன்று குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் நிர்வாகம் விதிக்கும் அதிரடியான கட்டுப்பாடுகளும் அமெரிக்க நலன் கருதி அவர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுமே பல அமெரிக்கர்களை மிரளவைத்து அமெரிக்காவை விட்டே ஓட வைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.