'லட்சக் கணக்கில் வருமானம் வேண்டுமா? எங்களிடம் முதலீடு செய்யுங்கள்' என்று கூவி கூவி அழைக்கும் விளம்பரங்கள் சமூக வலைத் தளங்களில் மலிந்து விட்டன. அவற்றை நம்பி கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது.
தங்கள் கால்நடைப் பண்ணையில் முதலீடு செய்தால் மாதம் 2 முதல் 5 லட்சம் வரை லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து, 9 கோடி ரூபாய் பணத்தை பறிகொடுத்த 41 பேர் அளித்த புகாரின் பேரில் தெலங்கானாவில் சைபராபாத் காவல் துறையினர் ஒரு தம்பதியை வியாழன் அன்று கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட வெமுல சுப்பா ராவ் மற்றும் அவரது மனைவி வெமுல குமாரி, கொக்கப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அஜீஸ்நகர் மொய்னா பாத்தில் அமைந்துள்ள தங்களது நிறுவனமான கொண்டப்பள்ளி டெய்ரி ஃபார்ம் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடுகளுக்கு நல்ல வருவாயை வழங்குவதாக உறுதியளித்ததாக பொருளாதாரக் குற்ற பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
”…இவர்களது அறிவிப்பைப் பார்த்து ஆர்வம் கொண்டவர்கள் விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, அங்கிருந்த ஒருவர் அழைப்புகளை ஏற்று நல்ல முறையில் உரையாடி, பால்பண்ணை வணிகத்தில் கிடைக்கும் பெரும்லாபத்தைப் பற்றி பேசி இருக்கிறார். மாதம் ஒன்றிற்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை லாபம் அளிப்பதாகக் கூறி இவர்களை முதலீடு செய்ய உற்சாகப் படுத்தி இருக்கிறார்” என்று காவல் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கைது செய்யப் பட்ட தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், இது போன்ற ஏமாற்று விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.