தன் ஐரோப்பிய தன்மையை இழக்கும் கனடா

ஐரோப்பிய தன்மையை இழக்கும் கனடா


சென்ற வார இறுதியில் கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் கனடா தனது ஐரோப்பிய தன்மையை இழந்து வருவதை உறுதி செய்துள்ளது.
பெரும் நிலபரப்பையும் ஏராளமான வளங்களையும் கொண்டிருந்தாலும் கனடா குறைவான மக்கள் தொகைக்கொண்ட ஒரு நாடாகவே விளங்குகிறது.
குறைவான மக்கள் தொகையின் காரணமாக கனடா வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த தகுதிவாய்ந்த நபர்களுக்கு குடியுரிமை வழங்கி தன் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்கிறது.
இது போக யுத்தங்கள், வறுமை, உள்நாட்டுப் போர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு தோறும் கனடாவிற்குள் அகதிகளாக வந்து சேருகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் கனடிய மண்ணுக்குள் நுழைந்து கனடிய மண்ணின் மைந்தர்களாகி விட்ட இந்த குடியேறிகள், கனடாவின் அரசியலிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
தற்போது கனடாவை ஆளும் லிபரல் கட்சி இந்தியாவிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் குடியேறியவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதால் கனடாவில் வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் மக்கள் லிபரல் கட்சிக்கு தங்கள் ஆதரவை நல்கி வருகின்றனர்.
அந்த வகையில் லிபரல் கட்சி ஏராளமான பல்லின பிரதிநிதிகளுக்கு இந்த தேர்தலிலும் வாய்ப்பளிக்க, வாய்ப்பு பெற்ற பலரும் வெற்றி வாய்ப்பை தக்க வைத்திருக்கிறார்கள்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் கனடாவில் போட்டியிட்ட அறுபத்தைந்து சீக்கிய வேட்பாளர்களில் இருபத்திரெண்டு பேர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்!
இது போக இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இருவர் கனடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து குடியேறிய பலரும் இந்த முறை மிகப்பெரிய அளவில் கனடிய பாராளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர்,
ஐரோப்பிய வம்சாவழிகளுக்கு நிகராக புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளும் கனடிய அரசியலில் அங்கீகாரம் பெற்று வருவது எதிர்காலத்தில் கனடாவில் புதிய அரசியல் நெருக்கடிகளுக்கு வித்திடலாம் என கருதப்படுகிறது.

Trending Articles