A1 ஆகும் AI

A1 ஆகும் AI

ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் (ஏ ஐ) எல்லா துறைகளில் இன்றியமையாததாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலக் கட்டத்தில் ஏமாற்று வேலைகளிலும் இதன் பங்களிப்பு கவலைக்குரிய வகையில் அதிகமாகவே உள்ளது.

ஒரு முகநூல் பக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்று வந்த போலி வீடியோவுடன் இருந்த 'லிங்க்'கில் இணைந்து, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.33 லட்சத்தை இழந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். நவீன பயிற்சியும் ஆங்கில அறிவும் உள்ள இளைஞர்களைக் கொண்டு இந்த மோசடி நடப்பதால், படித்த, நன்கு விபரம் அறிந்து ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களே இதில் ஏமாறுவதாகத் தெரிய வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த லாரன்ஸ் டொமினிக் சேவியர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுடன், இரண்டு பேக்கரிகளையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் குன்னூர் முன்னாள் நகரச் செயலாளராக இருந்த இவர் இப்போது பிற்படுத்தப் பட்டோர் பிரிவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார். முகநூல் பக்கம் ஒன்றில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய உதவுவதாக வெளியான ஒரு லிங்க்கை தொடர்பு கொண்டு பணம் செலுத்த ஆரம்பித்த அவர் ரூ.33 லட்சத்து 10ஆயிரத்து 472 வ்ரை செலுத்திய பின்னரே தான் ஏமாற்றப் பட்டிருப்பதை உணர்ந்தார். இது தொடர்பாக இவர் அளித்த புகாரின் பேரில் பிஎன்எஸ் 318(ஏமாற்றுதல்) பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக உதகை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா தெரிவித்தார்.
லாரன்ஸ் சேவியர் கொடுத்த பணத்தில் ரூ15 லட்சத்தை முடக்கி விட்டதாக அறிவித்த சைபர் க்ரைம் போலீசார், ஏமாற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், பணம் செலுத்தப் பட்ட வங்கிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதால், அவற்றை மீட்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.
 

Trending Articles