முதலைகளுக்கு மத்தியில் உயிருக்கு போராடிய விமானப் பயணிகள்..

undefined

 


விமான கோளாறு காரணமாக முதலைகள் நிறைந்த சதுப்பு நிலத்தில் தரையிறக்கப் பட்ட தனியார் விமானமொன்றில் இருந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப் பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளியன்று 48 மணிநேரமாக காணாமல் போன விமானம் ஒன்றை பொலிவியாவின் சதுப்பு நிலக் காட்டில் மீனவர்கள் கண்டுபிடித்ததாகவும், அதில் மூன்று பெண்களும், ஒரு குழந்தையும் விமானியும் உயிருடன் இருந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.
மத்திய பொலிவியாவின் பெனி என்ற பகுதியில் ரேடரில் இருந்து மறைந்த விமானத்தை தேடும் பணி கடந்த வியாழன் அன்று ஆரம்பமானது.
வடக்கு பொலிவியாவின் உள்ள பௌரேஸில் இருந்து டிரினிடாட் நகரத்திற்கு பயணமாகும் போது, விமானத்தில் மோட்டார் செயலிழப்பு காரணமாக இட்டனோமாஸ் ஆற்றின் அருகே அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமானி, ஆண்ட்ரேஸ் வெலர்ட் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார். சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் முதலைகள் சூழ்ந்திருக்க, பயணிகள் விமானத்தின் மேல்பகுதியில் ஏறி இருந்ததாகவும், விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருளின் வாசனை தான் அவற்றை நெருங்க விடாமல் செய்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
,முதலைகளும், அவற்றோடு அனகோண்டா பாம்பு ஒன்றும் பசியுடன் அவர்களைச் சுற்றி காத்திருக்க, பயணிகள் கையில் இருந்த கசவா (கிழங்கு) மாவை சாப்பிட்டுப் பசியாறினர். குடிப்பதற்கு தண்ணீர் கூட அவர்களிடம் இல்லை.
விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்ட மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து அனுப்பப் பட்ட ஹெலிகாப்டரில் பயணிகள் ஐவரும் மீட்கப் பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

பெனி பிராந்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ரூபன் டாரஸ் காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


 

Trending Articles