வறுமையிலும் நேர்மை மலையாளிகளை நெகிழவைத்த தமிழன்

தமிழகத்தின் துறையூரிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வேலை தேடி சென்ற குமார் என்ற இளைஞர் அங்கு சாலையில் தான் கண்டெடுத்த நகைப்பையை தொலைத்தவர்களிடமே ஒப்படைத்த சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழ வைத்ததோடு அவருக்கு புதிய வேலையையும் பெற்று தந்திருக்கிறது.

திருச்சி துறையூரை சார்ந்த இளைஞர் குமார், பத்தாம் வகுப்பு வரை படித்தவர். இவர் இரு தினங்களுக்கு முன்னர் வேலை தேடி கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு போயிருந்தார். அங்கு பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்த அவருக்கு எதிர்பார்த்து சென்ற வேலை கிடைக்கவில்லை. வேலை தேடி அலைந்ததில் கையிலிருந்த பணமும் காலியானத. உணவுக்கும் திரும்பி வருவதற்கான பஸ் டிக்கெட்டுக்கும் பணம் இல்லாத சூழ்நிலையில் சாலையோரமாக நடந்து வந்த குமாரின் கண்களில் அந்த பை தென்பட்டது. அதை எடுத்த குமார் திறந்து பார்த்தபோது, அதற்குள் மூன்று தங்க நகைகள் இருந்தன.

பைக்குள் நகைகள் இருப்பதை பார்த்த குமார் உடனே அதை அருகேயிருந்த கடிகாரக் கடைக்காரிடம் கொடுத்து விபரத்தை சொல்ல கடிகாரக்கடைக்கார் அந்த பையினுள் இருந்த நகைக்கடை பில்லில் இருந்த தொலைபேசி எண்ணை வைத்து நகைகளைத் தவற விட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க, சற்று நேரத்தில் நகைப் பையை தவறவிட்ட லிசி என்பவர், தமது குடும்பத்தினருடன் உடனடியாக கிளம்பி வந்து நகைப்பையை பெற்றுக்கொண்டதோடு குமாருக்கு சன்மானமும் வழங்கினர்.

வறுமைச் சூழலிலும் தன் கையில் கிடைத்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை உரியவர்களிடம் சேர்ப்பித்த குமாரின் நேர்மையை அங்கிருந்தவர்கள் பாராட்டி மகிழ்ந்ததோடு, அந்த பகுதியில் டி வி எஸ் ஷோரூம் நடத்தி வரும் சித்திக் என்பவர் குமாருக்கு தன் நிறுவனத்தில் வேலை தருவதாகவும் உறுதியளிக்க, மே மாத துவக்கத்தில் மீண்டும் தான் கோழிக்கோடு வந்து வேலையில் சேர்ந்து கொள்வதாக தெரிவித்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார் குமார்.

Trending Articles