நான்கு நாட்களில் இரண்டு முறை மலையுச்சியில் சிக்கிய சீன இளைஞர்.

   நான்கு நாட்களில் இரண்டு முறை மலையுச்சியில் சிக்கிய  சீன இளைஞர்.

வீட்டை விட்டு கிளம்பி பாதி தூரம் வந்த பிறகு, “ஃபோனை எடுத்தேனா?” வாட்டர் பாட்டிலை எடுத்தேனா?” ஹீட்டரை ஆஃப் செய்தேனா?” என்று மூளையைப் பிசைந்து கொண்டு திரும்பி ஓடி வரும் நபரா நீங்கள்? உங்களை சாப்பிட்டு ஏப்பம் விடும் ஒரு நபர் இன்று சர்வதேச அளவில் பிரபலம் ஆகி இருக்கிறார்.
ஜப்பானில் வாழும் ஒரு 27 வயது சீன இளைஞர் அவர். ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃப்யூஜியில் ஏறிய அவர் அதிக உயரத்தில் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையால் தவித்து பின்னர் மீட்புக் குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டார்.
ஆனால், திரும்பவும் நான்கே நாட்களில் அவர் சுமார் 10ஆயிரம் அடி உயரமுள்ள மலை பாதையில் விட்டுப் போன செல்ஃபோனையும், மற்ற பொருட்களையும் எடுக்கப் போய், ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமல் தவித்த போது, யாரோ ஒருவர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்து அவரை இரண்டாம் முறையாக மீட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பொதுவாக ஜூலை முதல் செப்டம்பர் தொடக்கம் வரை மட்டுமே இந்த மலைப் பாதைகளில் ஏற அனுமதி உண்டு என்றாலும், மற்ற காலங்களில் மலையேறினால் எந்த அபராதமும் விதிப்பதில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீன இளைஞருக்கு இரண்டாம் முறை மீட்கப் பட்டதற்காக வாவது அபராதம் விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக கலாச்சார பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்ட இந்த ஜப்பானின் சின்னமான "ஃப்யூஜிசான்" 3, 776 மீட்டர் (12,388 அடி) உயரமுடையது. அதிக நெரிசலாலும், அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, இரவிலேயே சரிவான பாதைகளில் ஏறுவதாலும் ஏற்படும் விபத்துகளைக் கட்டுப்படுத்த, உள்ளூர் அதிகாரிகள் சென்ற ஆண்டில், முக்கிய மலைப் பாதைகளில் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் விதித்து, தலையில் அணிய ஒரு தொப்பியையும் அறிமுகப் படுத்தினர். இந்த ஆண்டு, மற்ற பாதைகளிலும் இந்த கட்டுப் பாடுகள் கொண்டுவரப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Trending Articles