"ஓம் சரவண பவ" மந்திரத்தின் மகிமை: ஷட்கோண எந்திர பூஜை ரகசியங்கள் என்ன? ஆன்மீகப் பேச்சாளர் விஜயகுமார்!

ஓம் சரவண பவ மந்திரத்தின் மகிமை: ஷட்கோண எந்திர பூஜை ரகசியங்கள் என்ன? ஆன்மீகப் பேச்சாளர் விஜயகுமார்!

சென்னை: பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் இரண்டு பெரும் சக்திகள் சிவம் மற்றும் சக்தி. இவ்விரு பெரும் ஆற்றல்களும் இணைந்த முழுமையான வடிவமே முருகப்பெருமான். இந்த தெய்வீக வடிவத்தின் அற்புத மகா மந்திரமே "ஓம் சரவண பவ" என்பதாகும். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் மகத்துவத்தையும், அதனுடன் இணைந்த சட்கோண எந்திர பூஜையின் ரகசியங்களையும் பிரபல ஆன்மீகப் பேச்சாளர் விஜயகுமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

சிவசக்தி சொரூபம் "ஓம் சரவண பவ": "வேலு உண்டு வினையில்லை, மயில் உண்டு பயமில்லை, குகன் உண்டு குறைவில்லை, கந்தன் உண்டு கவலையில்லை" என்ற வரிகளுக்கு ஏற்ப, முருகனின் அருள் அளப்பரியது. பிரபஞ்ச இயக்கத்திற்கு ஆதாரமான சிவம் மற்றும் சக்தி இரண்டும் இணைந்த வடிவம் முருகன். அந்த வடிவத்தினுடைய அற்புத மகா மந்திரமே "ஓம் சரவண பவ" ஆகும். இந்த மந்திரத்தின் பெருமையை பாம்பன் சுவாமிகள் "ஆறெழுத்து உண்மை" என்ற நூலில் விவரித்துள்ளார். இந்த மந்திரம் அதை உச்சரிப்பவர்களைக் காக்கும் என்றும், முருகப்பெருமானே அருணகிரிநாதர் போன்ற பல அடியார்களுக்கு இம் மந்திரத்தை உபதேசித்ததாகவும் விஜயகுமார் ஐயா குறிப்பிட்டார். "முக்திக்கொரு வித்து குருபர" என்று அருணகிரிநாதர் கூறுவது போல, சரவண பவ மந்திரம் வாழ்க்கையில் முக்தியை அடைய உதவும் ஒரே விதை என்றார் அவர். முருகனின் ஆறு திருமுகங்களுக்கும் உரிய ஆறு அக்சரங்களே "ச ர வ ண ப வ" ஆகும்.

சட்கோண எந்திரத்தின் மகிமை மற்றும் வரையும் முறை: 'எந்திரம்' என்பது இறை ஆற்றலை இயங்க வைக்கும் ஒரு கருவியாகும். முருகப்பெருமானின் சட்கோண எந்திரம், மேல்நோக்கிய ஒரு முக்கோணம் (சிவபெருமானைக் குறிப்பது) மற்றும் கீழ்நோக்கிய ஒரு முக்கோணம் (அன்னை ஆதிபராசக்தியைக் குறிப்பது) இணைந்து உருவாகும் ஆறு கோணங்களைக் கொண்டது. இது சிவசக்தி ஐக்கியத்தின் அற்புதமான வடிவம்.

எந்திரம் வரையும் முறை:

  1. பலகை தேர்வு: சந்தனம் அல்லது பலா போன்ற உயர்தர மரத்தில் சிறிய பலகையைத் தேர்வு செய்யவும்.

  2. சுத்தம் செய்தல்: பலகையை மஞ்சள் தடவி சுத்தம் செய்து, பூஜை செய்யும் இடத்தில் வைக்கவும்.

  3. கோலம்: அரிசி மாவால், ஒரு அளவுகோல் (ஸ்கேல்) பயன்படுத்தி துல்லியமாக மேல்நோக்கிய முக்கோணம், கீழ்நோக்கிய முக்கோணம் என சட்கோணம் வரையவும். கோடுகள் நேராகவும், சரியான அளவிலும் இருக்க வேண்டும்.

  4. நிரப்புதல்: ஆறு கோணங்களுக்குள்ளும் (முக்கோணங்களுக்குள்ளும்) இடைவெளி இல்லாமல் மஞ்சள் பொடியைத் தூவ வேண்டும்.

  5. அக்சரங்கள் எழுதுதல்: எந்திரத்தின் ஆறு கோணங்களிலும் "ச ர வ ண ப வ" என்ற அக்சரங்களை எழுத வேண்டும்.

எந்திரத்திற்கு உயிர் ஊட்டுதல் (ஆற்றல் கடத்துதல்): வரையப்பட்ட எந்திரத்தை இயக்க, அதற்கு உயிருள்ள ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை நம்மிடமிருந்தே எந்திரத்திற்குக் கடத்த வேண்டும்:

  1. மந்திர ஜெபம்: முருக சிந்தனையில் மனதை ஒருமைப்படுத்தி, "ஓம் சரவண பவ" மந்திரத்தை 108 முறை மனதிற்குள்ளேயே, சுவாசித்தின் வேகத்திற்கேற்ப ஜெபிக்க வேண்டும்.

  2. புஷ்ப அர்ச்சனை: ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும் போதும், எந்திரத்தின் மீது பூக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  3. திருப்புகழ் பாராயணம்: எந்திரத்தை முழுமையாக இயக்க, அருணகிரிநாதர் திருவேங்கடத்தில் அருளிய "சரவண பவநிதி அருமுக குருபர..." என்ற திருப்புகழைப் பாட வேண்டும். இந்த திருப்புகழைப் பாடும்போது, அருணகிரிநாதரின் அனுபவம் போல, முருகப்பெருமான் அந்த சட்கோண எந்திரத்தின் நடுவே வந்து எழுந்தருள்வார்.

எந்திர பூஜை மற்றும் பலன்கள்: முருகப்பெருமான் எந்திரத்தில் எழுந்தருளிய பிறகு, அவருக்கு பூஜை செய்ய வேண்டும்:

  1. மந்திர ஜபம்: "ஓம் ஷட்கோணபதயே நமோ நமஹ" (பாம்பன் சுவாமிகள் அருளியது) என்ற மந்திரத்தை 6 மலர்களால் சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

  2. தூப தீபம்: விளக்கேற்றி, தூப தீபங்கள் காட்டி, மனமுருகி நைவேத்தியம் (படையல்) படைக்க வேண்டும்.

  3. பாராயணம்: திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி போன்ற துதிகளைப் பாராயணம் செய்து கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும்.

"ஓம் சரவண பவ" மந்திரத்தின் ஒவ்வொரு அக்சரத்தின் பலன்கள்:

  • ச: லட்சுமி கடாட்சம் (செல்வம்)

  • ர: வாக்கு வன்மை, சரஸ்வதி கடாட்சம் (பேச்சாற்றல், ஞானம்)

  • வ: யோகம், போகம் (ஆன்மீக, உலக இன்பங்கள்)

  • ண: வெற்றி

  • ப: முக்தி (விடுதலை)

  • வ: நோயற்ற வாழ்வு அருணகிரிநாதர் கூறுவது போல, இந்த மந்திரம் இகபர சௌபாக்கியத்தை (இவ்வுலக மற்றும் மேலுலக இன்பங்கள்) அளிக்கும்.

தூய்மையும் நம்பிக்கையும் அவசியம்: இந்த பூஜையைச் செய்ய, உள்ளத்தூய்மை, உடல் தூய்மை மற்றும் இடத்தூய்மை மிக முக்கியம். அழுக்கான இடத்தில் கடவுள் அருள மாட்டார். கவலைகளை மனதில் இருத்தாமல், முருகனை மட்டுமே நினைத்து முழு நம்பிக்கையுடன் பூஜை செய்தால், நிச்சயமாக முருகப்பெருமான் நம் கவலைகளைத் தீர்த்து, கைமேல் பலன் தருவார்.

பூஜை செய்ய உகந்த நாட்கள்:

  • சஷ்டி திதிகள் (வளர்பிறை, தேய்பிறை)

  • வெள்ளிக்கிழமைகள் (நாரத மகரிஷி, முசுகுந்த சக்கரவர்த்தி முக்கியமானதாகக் கூறியது)

  • மாதாந்திர கிருத்திகை நட்சத்திரம்

இந்த அற்புதமான வழிமுறைகள் 15 ஆம் நூற்றாண்டில் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அருணகிரிநாதர் பெருமானால் அருளப்பட்டவை என்பதால், இவை நிச்சயம் வாழ்க்கையை மாற்றும் என்று விஜயகுமார் ஐயா உறுதிபடத் தெரிவித்தார்.Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles