நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை காண ’தல’ அஜித் நேரில் வருகை தந்ததை அடுத்து, ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித்தை நேரில் பார்ப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நேற்றைய போட்டியில், சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சென்னை அணிக்கு இது ஏழாவது தோல்வியாகும்.
வழக்கமாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால், ரசிகர்கள் ஆத்திரம் அடைவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் ’தல’ அஜித்தை மைதானத்தில் பார்த்தது, ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.
அஜித், தனது மனைவி, மகள், மகனுடன் இந்த போட்டியை கடைசி வரை இருந்து பார்த்தார் என்பதும், கேமராமேன்கள் அடிக்கடி அஜித்தையும் அவருடைய குடும்பத்தையும் காண்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, போட்டியை பார்த்துவிட்டு வெளியே சென்ற ரசிகர்கள், ’சிஎஸ்கே தோற்றாலும் பரவாயில்லை, தல அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்று பல கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இந்த போட்டியை பார்க்க வந்திருந்தார் என்பதும், அதேபோல் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்களும் இந்த போட்டியை நேரில் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.